தமிழ்நாடு சட்டமன்ற வரலாற்றில் முதன்முறையாகப் பொருளாதார பலமின்றி, எளிய பின்னணியில் இருந்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அனைத்து எம்.எல்.ஏ-க்களுக்கும் அரசு சார்பில் நான்கு சக்கர வாகனம் (கார்) வழங்கப்படும் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பு சட்டப்பேரவையில் வெளியிடப்பட்டுள்ளது. சட்டப்பேரவை உறுப்பினர் எல்.இ. ஜோதிமணி முன்வைத்த கோரிக்கையை ஏற்று, மக்களாட்சியின் தூண்களாக விளங்கும் மக்கள் பிரதிநிதிகள் எவ்விதத் தடையுமின்றித் தங்களின் தொகுதிப் பணிகளைச் சீராகவும் விரைவாகவும் மேற்கொள்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடைக்கோடி மக்கள் வரை லஞ்சமற்ற, நேர்மையான மற்றும் வெளிப்படையான நிர்வாகத்தைக் கொண்டு சேர்ப்பதை நோக்கமாகக் கொண்டு இந்த வசதி செய்து தரப்படுகிறது. சொந்த வாகனம் இல்லாத எளிய சூழலில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள், தங்களது தொகுதிக்கு உட்பட்ட கிராமப்புறங்கள் மற்றும் தொலைதூரப் பகுதிகளுக்கு எவ்விதச் சிரமமுமின்றிப் பயணம் செய்யவும், மக்களை நேரடியாகச் சந்தித்துக் குறைகளைக் கேட்டறியவும் இந்த அரசு வாகனம் பெரிதும் உதவியாக இருக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
வழங்கப்படும் இந்த அரசு வாகனத்தின் எரிபொருள் செலவு, ஓட்டுநர் ஊதியம் மற்றும் வாகன பராமரிப்புச் செலவினங்களுக்காக மாதம் ₹75,000 வாகனப் படியாக வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களின் பயணத் தேவைகளுக்காகப் பிறரைச் சார்ந்திருக்கும் நிலை முற்றிலுமாகத் தடுக்கப்பட்டு, எவ்விதச் சமரசமுமின்றிச் சுதந்திரமாகவும் நேர்மையாகவும் தங்களது கடமைகளைச் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மேலும், சட்டமன்ற உறுப்பினர்களின் தினசரி அலுவலக நிர்வாகப் பணிகளையும் தொகுதி மக்களின் கோரிக்கைகளையும் விரைவாகக் கையாள்வதற்கு ஏதுவாக, ஓர் உதவியாளரை நியமித்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்த உதவியாளருக்காக அரசு சார்பில் மாதந்தோறும் ₹25,000 நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதோடு, இதற்கான உரிய சட்டத் திருத்தங்கள் விரைவில் மேற்கொள்ளப்பட்டு அதிகாரப்பூர்வ அரசாணைகள் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.