கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது விதிக்கப்படவிருந்த 50 சதவீதக் கூடுதல் வரியை, மூன்று நாட்களுக்குத் தற்காலிகமாக ஒத்திவைப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், இருதரப்பு ஒப்பந்த ஆவணங்களை இறுதி செய்யும் பணி நடைபெற்று வருவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் இந்த அதிரடி வரி விதிப்பு நடைமுறைக்கு வரச் சில மணி நேரங்களே எஞ்சியிருந்த நிலையில், டொனால்ட் டிரம்ப் மற்றும் கனடா பிரதமர் மார்க் கார்னி இடையே அவசரத் தொலைபேசி பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாகத் தற்காலிகமாக வரி விதிப்பு நிறுத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இரு நாடுகளுக்கும் இடையிலான விரிவான வர்த்தக ஒப்பந்தம் விரைவில் இறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, அமெரிக்காவின் மதுபானங்கள், பால் பொருட்கள் மற்றும் வாகனத் துறைகள் மீது கனடா பாரபட்சமான வர வரம்புகளை விதிப்பதாகக் குற்றம்சாட்டி இந்த 50 சதவீத வரியை அமெரிக்கா அறிவித்திருந்தது. சிமெண்ட், காகிதம், ஆடை மற்றும் இதர உற்பத்திப் பொருட்கள் உள்ளிட்ட சுமார் 20 பில்லியன் டாலர் மதிப்புள்ள கனடாவின் வர்த்தகப் பொருட்கள் இந்த வரிவிதிப்பால் பாதிக்கப்படும் சூழல் உருவானது.
இந்த வரி நிறுத்தம் குறித்த அறிவிப்போடு, பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள ‘கீஸ்டோன் எக்ஸ்.எல்’ (Keystone XL) குழாய்வழித் திட்டமும் மீண்டும் உயிர்பெற வாய்ப்புள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகப் பதற்றம் தற்காலிகமாகத் தணிந்துள்ள நிலையில், இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையின் முடிவுகளை சர்வதேச வர்த்தக உலகம் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.