தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில் சிவகாசி பட்டாசுத் தொழில் முடக்கம் மற்றும் தொழிலாளர்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகள் குறித்து அமைச்சர் கீர்த்தனா மற்றும் முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு இடையே அனல் பறக்கும் காரசார விவாதம் நடைபெற்றது. சிவகாசி தொகுதியில் பட்டாசு ஆலை விபத்துகளுக்குப் பிறகு அரசின் சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்துப் பேசிய அமைச்சர் கீர்த்தனா, ‘ஆய்வு’ பணிகளுக்குப் பிறகுப் பிரச்சனைகள் அனைத்தும் சுமூகமாக முடிவுக்கு வந்துவிட்ட நிலையில், எதிர்க்கட்சியினர் தேவையின்றி கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்திப் பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துவதாகக் குற்றம்சாட்டினார்.
அமைச்சரின் இந்தக் கூற்றிற்குக் உடனடியாகப் பதிலடி கொடுத்த திமுக எம்.எல்.ஏ தங்கம் தென்னரசு, சிவகாசியில் பட்டாசுத் தொழிலாளர்கள் அனைவரும் சந்தோஷக் கடலில் மிதப்பதைப் போன்ற மாய பிம்பத்தை அரசு உருவாக்க முயல்வதாகச் சாடினார். ‘ஆய்வு’ என்ற பெயரில் முறைப்படி உரிமம் பெற்று இயங்கும் தொழிற்சாலைகள் மற்றும் சில்லறை விற்பனை மையங்களில் நடத்தப்படும் கெடுபிடிகளால் உற்பத்தியும் விற்பனையும் முற்றிலும் முடங்கியுள்ளதாகத் தெரிவித்த அவர், இது அரசியல் போராட்டம் அல்ல என்றும், லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்கான ஜனநாயகம் அளித்த உரிமை என்றும் திட்டவட்டமாக வாதிட்டார்.
மேலும் பேசிய தங்கம் தென்னரசு, இன்னும் சில மாதங்களில் தீபாவளிப் பண்டிகை வரவிருப்பதையும், அதற்குள் பருவமழை தொடங்கும் என்பதால் அதற்கு முன்னதாக உற்பத்தியைச் செய்து முடித்தால் மட்டுமே பண்டிகைக் காலத்திற்கானப் பட்டாசுகளை விநியோகிக்க முடியும் என்பதையும் சுட்டிக்காட்டினார். விதிகளை மீறும் ஆலைகள் மீது நடவடிக்கை எடுப்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை என்றும், ஆனால் ஆய்வு நடவடிக்கைகளின் மூலம் ஒட்டுமொத்தத் தொழிலும் முடங்குவது பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் பேரவையின் கவனத்திற்குக் கொண்டு வந்தார்.
இதற்கு மீண்டும் பதிலளித்த அமைச்சர் கீர்த்தனா, தொழிலாளர் நலன் பாதிக்கப்படாத வகையில் அரசு அமைப்புகள் மற்றும் அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அனைத்து சிக்கல்களும் தீர்க்கப்பட்டுவிட்டதாகக் கூறினார். பிரச்சனைகள் களையப்பட்டு மக்கள் மீண்டும் பணிக்குச் செல்லத் தொடங்கிய பிறகும், எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாகக் கண்டன ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்பது இதில் அரசியல் புகுத்தப்படுவதையே காட்டுகிறது எனத் தெரிவித்த பதிலடியால், சட்டமன்றத்தில் இருதரப்புக்கும் இடையே காரசாரமான விவாதம் நீடித்தது.