டெஸ்ட் கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர் மற்றும் விராட் கோலி ஆகிய இருவரில் யார் சிறந்தவர் என்ற விவாதம் மீண்டும் சூடுபிடித்துள்ளது. தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டனும் ஜாம்பவானுமான ஏபி டி வில்லியர்ஸ், தனது யூடியூப் சேனலில் வெளியிட்ட வீடியோவில், வெளிநாட்டு மண்ணில் சிறப்பாக செயல்படுவதில் சச்சினை விட விராட் கோலி ஒரு படி மேலே சென்று தரத்தை உயர்த்தியதாகப் (Raised the bar) பாராட்டியுள்ளார்.
ஆசிய கண்டத்தைச் சேர்ந்த பேட்டர்களும் வேகப்பந்துவீச்சு மற்றும் பவுன்ஸ் நிறைந்த வெளிநாட்டு ஆடுகளங்களில் வெல்ல முடியும் என்பதை முதலில் நிரூபித்துக் காட்டியவர் சச்சின் டெண்டுல்கர் தான் என்பதை டி வில்லியர்ஸ் ஒப்புக்கொண்டார். இருப்பினும், சச்சின் அமைத்துக் கொடுத்த அந்த அடித்தளத்தை எடுத்துக்கொண்டு, இந்திய அணியை வெளிநாடுகளில் எதிரணிகளுக்கு சிம்ம சொப்பனமாக மாற்றியதில் கோலியின் பங்களிப்பே மிகவும் வலிமையானது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
புள்ளிவிவரங்களின்படி சச்சின் டெண்டுல்கர் 200 டெஸ்ட் போட்டிகளில் 15,921 ரன்கள் குவித்து முதலிடத்தில் உள்ளார். இதில் வெளிநாடுகளில் மட்டும் 8,705 ரன்கள் அடங்கும். மறுபுறம், 123 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய விராட் கோலி 9,230 ரன்களுடன் ஓய்வு பெற்றார். எண்களின் அடிப்படையில் சச்சின் முன்னிலையில் இருந்தாலும், இந்திய அணியின் ஆக்ரோஷமான ஆட்டத்திறனிலும் மனோபாவத்திலும் கோலி ஏற்படுத்திய தாக்கம் ஈடு இணையற்றது என்பதே டி வில்லியர்ஸின் கருத்தாகும்.
கோலி மற்றும் சச்சின் ஏற்படுத்திய இந்தத் தாக்கம் தான் தற்போதைய இந்திய இளம் வீரர்களான கே.எல். ராகுல், தேவ்தத் படிக்கல் போன்றோருக்குப் பெரிய வழிகாட்டியாக அமைந்துள்ளது என்றும் அவர் கூறினார். அதே சமயம், கே.எல். ராகுல் வெளிநாடுகளில் இன்னும் பெரிய ரன்களைக் குவித்து தனது சராசரியை உயர்த்த வேண்டும் என்றும், சதம் அடிப்பதுடன் திருப்தியடையாமல் 180 ரன்கள் வரை பெரிய இன்னிங்ஸ்களாக மாற்ற பழக வேண்டும் என்றும் டி வில்லியர்ஸ் அறிவுறுத்தியுள்ளார்.