வட கொரியா தனது சுனான் (Sunan) தலைநகரப் பகுதியிலிருந்து ஒரே நேரத்தில் சுமார் 10 குறுந்தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளைக் (SRBMs) கிழக்குக் கடல் திசையை நோக்கிச் சோதித்து பிராந்தியத்தில் மாபெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தலைநகர் சியோல் மற்றும் தென்கொரியாவின் முக்கிய விமானப் படைத் தளங்களை இலக்கு வைக்கும் திறன்கொண்ட இந்த ஏவுகணைகள் சுமார் 350 கிலோமீட்டர் தூரம் வரைப் பாய்ந்து சென்று கடலில் விழுந்ததாகத் தென்கொரிய கூட்டுப் படைத் தளபதிகள் அலுவலகம் ஊர்ஜிதம் செய்துள்ளது.
ஒரே நேரத்தில் 10 பாலிஸ்டிக் ஏவுகணைகளை வட கொரியா சரமாரியாகப் பாய்ச்சியது மிக அரிதான ஒரு ராணுவ நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது. எதிரி நாடுகளின் வான் பாதுகாப்பு அமைப்புகளைத் திணறடிக்கும் “சாச்சுரேஷன் ஸ்ட்ரைக்” (Saturation Strike) ரகப் போர் பயிற்சிகளின் ஒரு பகுதியாகவே வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் இந்த சோதனையை முன்னெடுத்துள்ளதாக சர்வதேச ராணுவ பகுப்பாய்வாளர்கள் கருதுகின்றனர்.
இந்த ஏவுகணைச் சோதனையைத் தொடர்ந்து ஜப்பான், தென்கொரியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் பாதுகாப்பு அமைப்புகள் உடனடியாக அவசர ஆலோசனையில் ஈடுபட்டன. ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் (UN Security Council) தீர்மானங்களை வட கொரியா வெளிப்படையாக மீறுவதாகச் சாடிய ஜப்பான் பிரதமர் அலுவலகம், வட கொரியாவின் இந்தத் தூண்டுதல் நடவடிக்கைகளுக்குத் தனது கடுமையானக் கண்டனங்களைப் பதிவுசெய்துள்ளது.
கொரிய தீபகற்பப் பிராந்தியத்தில் அமெரிக்கா மற்றும் தென்கொரியக் கூட்டு ராணுவப் பயிற்சிகள் தீவிரமடைந்து வரும் சூழலில், வட கொரியாவின் இந்த அதிரடி ஏவுகணைச் சோதனைகள் போர் மேகங்களை மேலும் அடர்த்தியாக்கியுள்ளன. தென்கொரிய ராணுவம் தனது கண்காணிப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளதுடன், எந்தவொரு ராணுவ அச்சுறுத்தலுக்கும் மிகக் கடுமையானப் பதிலடி கொடுக்கப்படும் எனக் எச்சரித்துள்ளது.