Posted in

பாகிஸ்தான் திருமண மண்டபம் முன் பெட்ரோல் குண்டு வீச்சு: பல கோடி மதிப்பிலான சொகுசு கார்கள் எரிந்து சாம்பல் – பயங்கர சிசிடிவி காட்சி!

பிரிட்டனின் பர்மிங்காம் (Birmingham) நகரில் உள்ள ஸ்பார்க்புரூக் பகுதியில் அமைந்துள்ள பிரம்மாண்ட திருமண மண்டபத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான சொகுசு சூப்பர்கார்களுக்கு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானிய குடும்பத்தைச் சேர்ந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்த போது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ராயல் ஷாலிமார் (Royal Shalimar) என்ற அந்தத் திருமண மண்டபத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் கலந்துகொண்டு விழாவைக் கொண்டாடிக் கொண்டிருந்தனர். அப்போது, மண்டபத்தின் நுழைவு வாயில் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த பெர்ராரி (Ferrari) மற்றும் மெக்லாரன் (McLaren) உள்ளிட்ட பல கோடி மதிப்பிலான சொகுசு ரக கார்கள் மீது, முகமூடி அணிந்த மர்ம நபர்கள் திடீரெனப் பெட்ரோல் குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தினர்.

வெளியாகியுள்ள சிசிடிவி (CCTV) காட்சிகளில், கருப்பு உடை மற்றும் முகமூடி அணிந்த நபர்கள் சிலர் மண்டபத்தின் எதிரே நின்று பெட்ரோல் குண்டுகளை வீசுவதும், கார்கள் உடனடியாகத் தீப்பற்றி எரியத் தொடங்குவதும் பதிவாகியுள்ளது. திடீரென எழுந்த அலறல் சத்தத்தைக் கேட்டு மண்டபத்திற்குள் இருந்த ஊழியர்களும் உறவினர்களும் வெளியே ஓடிவந்து தீயணைப்பான் கருவிகள் (Fire Extinguishers) மூலம் தீயைக் கட்டுப்படுத்த முயன்றனர்.

இந்தத் திடீர் தாக்குதலுக்கான துல்லியமான காரணம் என்னவென்று உடனடியாகத் தெரியவில்லை என்றும், தனிப்பட்டப் பகை காரணமாக இந்தச் சம்பவம் நடைபெற்றதா என்ற கோணத்தில் உள்ளூர் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணக் கொண்டாட்டத்தின் நடுவே பல கோடி ரூபாய் மதிப்பிலான விலையுயர்ந்த சூப்பர்கார்கள் தீக்கிரையாக்கப்பட்ட சம்பவம் பிரிட்டனில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் உருவாக்கியுள்ளது.