காசா பகுதியில் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருந்த ‘வேர்ல்ட் சென்ட்ரல் கிச்சன்’ (WCK) அமைப்பைச் சேர்ந்த 7 பணியாளர்கள் இஸ்ரேல் நடத்திய ட்ரோன் தாக்குதலில் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான குற்றவியல் விசாரணையை முடித்துக்கொள்வதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. இஸ்ரேலின் இந்த நடவடிக்கைக்குப் பிரிட்டன், ஆஸ்திரேலியா மற்றும் கனடா ஆகிய மூன்று நாடுகளின் வெளியுறவு அமைச்சகங்கள் இணைந்து பலத்த எதிர்ப்பையும் கடும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளன.
கடந்த 2024 ஏப்ரல் மாதம் நடைபெற்ற இந்தத் தாக்குதலில் பிரிட்டன், ஆஸ்திரேலியா, கனடா, போலந்து மற்றும் பாலஸ்தீனத்தைச் சேர்ந்த தொண்டு ஊழியர்கள் உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பாக இரு ஆண்டுகளுக்கும் மேலாக வெளிப்படையான விசாரணை நடத்த வலியுறுத்தப்பட்ட நிலையில், எந்தவொரு குற்றவியல் நடவடிக்கையும் இன்றி விசாரணையை முடிப்பதாக இஸ்ரேல் ராணுவத்தின் குற்றவியல் வழக்கறிஞர் பிரிவு தெரிவித்திருப்பது “மிகவும் அவமானகரமானது” (Shameful) என அந்த கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், சர்வதேச நிவாரண ஊழியர்களின் தியாகத்தைப் போற்றும் ‘உலக மனிதநேய தினத்தில்’ (World Humanitarian Day) இந்த முடிவை இஸ்ரேல் அறிவித்ததுமிகவும் கொடூரமான செயல் என்று அந்த மூன்று நாடுகளும் சாடியுள்ளன. “பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நீதி வழங்க இந்த முடிவு எந்தவிதத்திலும் போதாது. காசாவில் சர்வதேச நிவாரண ஊழியர்கள் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வரும் நிலையில், சர்வதேச மனிதநேயச் சட்டங்களுக்குக் கட்டுப்பட்டு இஸ்ரேல் பொறுப்பேற்க வேண்டும்” என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதல் ஒரு “துரதிர்ஷ்டவசமான தவறு” என்றும், களத்தில் ஏற்பட்ட செயல்பாட்டுக் குறைபாடுகளே காரணம் என்றும் தெரிவித்த இஸ்ரேல் ராணுவம், இதில் குற்றவியல் முகாந்திரம் எதுவும் இல்லை என வழக்கு விசாரணையை நிறைவு செய்துள்ளது. இருப்பினும், தங்களின் நாட்டுப் பிரஜைகளின் மரணத்திற்குப் பெறப்பட வேண்டிய நீதிக்காகத் தொடர்ந்து குரல் கொடுப்போம் எனப் பிரிட்டன், ஆஸ்திரேலியா மற்றும் கனடா அரசுகள் உறுதியாக அறிவித்துள்ளன.