Posted in

தாய்லாந்தில் தொடரும் கடுமையான வெள்ளப்பெருக்கு: உயிரிழப்பு 31 ஆக உயர்வு!

தாய்லாந்து நாட்டில் கடந்த செப்டம்பர் 16-ஆம் தேதி முதல் பெய்து வரும் தொடர் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது. அக்டோபர் 5, 2026 திங்கள்கிழமை அன்று தாய்லாந்து உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பேரழிவு தடுப்பு மற்றும் தணிப்புத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில். இந்நாட்டின் 47 மாகாணங்கள் மற்றும் தலைநகர் பாங்காக்கில் ஏற்பட்ட வெள்ளத்தால் சுமார் 41 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளப் பெருக்கின் பாதிப்பால் சுமார் 14.5 லட்சம் குடும்பங்கள் நேரிடையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அக்டோபர் 5 நிலவரப்படி, நாட்டின் 26 மாகாணங்கள் மற்றும் பாங்காக்கின் பல பகுதிகள் இன்னமும் வெள்ளத்தில் மூழ்கிக் காணப்படுகின்றன. தலைநகர் பாங்காக்கில் மட்டும் வெள்ளம் தொடர்புடைய சம்பவங்களில் 12 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்கட்டான இந்தச் சூழலைக் கையாள, தேசியப் பேரிடர் மேலாண்மைக் குழுவின் கூட்டத்தைக் கூட்டிய பிரதமர் அனுடின் சர்ன்விராகுல், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரண உதவிகளை விரைவுபடுத்துமாறு உத்தரவிட்டுள்ளார். நிரம்பியுள்ள நீர்த்தேக்கங்களிலிருந்து நீரை உடனடியாகத் திறந்துவிடவும், நீர்நிலைகளில் உள்ள அடைப்புகளை நீக்கி நீரை விரைவாக வெளியேற்றவும் அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார். மேலும், புதிய கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் நதிக்கரையோர மக்கள் உஷாராக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

தாய்லாந்தின் வானிலை மையம் வெளியிட்டுள்ள முன்னறிவிப்பின்படி, பாங்காக் உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் வலுவான புயல் காற்றுடன் கூடிய பலத்த மழை தொடர வாய்ப்புள்ளது. இதனால் ஆற்றின் நீர்மட்டம் மேலும் உயரக்கூடும் என்பதால் வெள்ளத் தடுப்புச் சுவர்களுக்கு வெளியே வசிக்கும் மக்கள் நிலைமையைக் உன்னிப்பாகக் கவனிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். மீட்புக் குழுவினர் தொடர்ந்து வெள்ள நிவாரணப் பணிகளிலும், பாதிக்கப்பட்ட மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லும் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.