Posted in

உசேன் போல்ட்டின் சாதனையை முறியடித்த சீன ஹியூமனாய்டு ரோபோ – பெய்ஜிங் போட்டியில் புதிய உலக சாதனை!

பெய்ஜிங்கில் நடைபெற்று வரும் உலக ஹியூமனாய்டு ரோபோ போட்டிகளில், சீனாவின் அதிநவீன ‘தியாங்காங் அல்ட்ரா’ (Tiangong Ultra) என்ற ரோபோ 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தை வெறும் 9.39 வினாடிகளில் கடந்து புதிய உலக சாதனை படைத்துள்ளது. ஜமைக்காவின் புகழ்பெற்ற தடகள வீரர் உசேன் போல்ட் 2009 ஆம் ஆண்டில் படைத்த 9.58 வினாடி சாதனையை விட இது வேகமானது என்பதால், சர்வதேச அளவில் தொழில்நுட்ப வல்லுநர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

பெய்ஜிங் ஹியூமனாய்டு ரோபோ கண்டுபிடிப்பு மையத்தால் உருவாக்கப்பட்ட இந்த தியாங்காங் அல்ட்ரா ரோபோ, தனக்கான முதன்மை சுற்றில் ‘ஆனர்’ நிறுவனத்தின் ‘லைட்னிங்’ (Lightning) என்ற ரோபோவுடன் தீவிரமாகப் போட்டியிட்டது. பந்தயத்தின் தொடக்கத்தில் லைட்னிங் ரோபோ முன்னிலையில் இருந்தபோதிலும், இலக்குக் கோட்டின் அருகே தியாங்காங் அல்ட்ரா அதிவேகமாக அதை முந்தி முதலிடம் பிடித்தது. லைட்னிங் ரோபோவும் 9.47 வினாடிகளில் பந்தயத்தை முடித்து, உசேன் போல்ட்டின் மனித சாதனையை முறியடித்தது குறிப்பிடத்தக்கது.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வேகப் பதிவு பார்வையாளர்களைப் பரவசப்படுத்திய போதிலும், பந்தயத்தின் முடிவு பகுதி சற்றே பரபரப்பாக அமைந்தது. பந்தயத்தின் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் இரு ரோபோக்களும் இலக்கில் வைக்கப்பட்டிருந்த தடுப்பு மெத்தைகள் மீது மோதி விழுந்தன. இதில் தியாங்காங் அல்ட்ரா நிலைகுலைந்து பார்வையாளர்கள் பகுதி வரை சென்று நின்ற நிலையில், லைட்னிங் ரோபோ மைதானத்திலேயே சுருண்டு விழுந்து தூக்கிச் செல்லப்பட்டது.

கடந்த ஆண்டு நடைபெற்ற போட்டியில் 100 மீட்டரை 21.50 வினாடிகளில் கடந்த தியாங்காங் அல்ட்ரா, ஒரே ஆண்டில் தனது வேகத்தை 12 வினாடிகளுக்கும் அதிகமாகக் குறைத்து மாபெரும் தொழில்நுட்பப் பாய்ச்சலை நிகழ்த்தியுள்ளது. செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோடிக்ஸ் துறையை நாட்டின் முக்கிய உத்தி சார்ந்த தொழிலாக மாற்றி வரும் சீனாவின் இந்த அசுர வளர்ச்சி, வருங்காலத்தில் தொழில்துறை மற்றும் மனித வாழ்க்கையில் ரோபோக்களின் ஆதிக்கத்தை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.