Posted in

நேட்டோ தளவாடங்கள் இலக்கா? – ஜெர்மனியில் மர்ம ட்ரோன் சதியால் அதிர்ச்சி

ஜெர்மனியின் மிக முக்கிய சரக்கு போக்குவரத்து மையமான லைப்சிக்/ஹாலே (Leipzig/Halle) விமான நிலையத்தில் உக்ரேனிய அன்டோனவ் (Antonov) சரக்கு விமானங்களுக்கு அருகில், வெடிமருந்துகளுடன் தரையிறங்கிய ட்ரோன் ஒன்று கண்டெடுக்கப்பட்ட சம்பவம் ஐரோப்பாவில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சதித்திட்டத்தின் பின்னணியில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தலைமையிலான உளவு அமைப்புகள் இருப்பதாக ஜெர்மன் உளவுத்துறை சந்தேகிக்கின்றனர்.

கண்டெடுக்கப்பட்ட அந்த ட்ரோனில் ‘செம்டெக்ஸ்’ (Semtex) மற்றும் PETN வகையைச் சேர்ந்த சக்திவாய்ந்த பிளாஸ்டிக் வெடிமருந்துகள் பொருத்தப்பட்டிருந்தன. உக்ரைனுக்கு ராணுவத் தளவாடங்களை எடுத்துச் செல்லும் விமானத்தைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தத் திட்டமிடப்பட்டதாகவும், வெடிபொருளில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாகவும் அறிக்கை தெரிவிக்கிறது.

ஜெர்மன் விமான நிலையத்தின் பாதுகாப்பை மீறி ஊடுருவிய இந்தச் சதித்திட்டம், வெறும் ஜெர்மனியோடு நிற்காமல் பிரிட்டன் உட்பட உக்ரைனுக்கு ஆதரவளிக்கும் அனைத்து ஐரோப்பிய நாடுகளுக்கும் நீளும் ரஷ்யாவின் ‘ஹைப்ரிட் போர்க்கலை’ (Hybrid Warfare) அச்சுறுத்தலின் ஒரு பகுதி எனப் பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். உக்ரைனுக்கு ட்ரோன்கள் மற்றும் ஆயுதங்களை வழங்கி வரும் பிரிட்டன் மீதும் இத்தகைய மறைமுகச் நாசவேலைகளை நடத்த ரஷ்யா திட்டமிட்டு வருவதாக உளவுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐரோப்பிய மண்ணில் நேட்டோ (NATO) படைகளின் தளவாட நகர்வுகளை முடக்குவதற்கும், உக்ரைனுக்குச் செல்லும் உதவிகளைத் தடுப்பதற்குமாக ரஷ்யா மேற்கொண்டு வரும் இந்தத் தொடர் நாசவேலை உத்திகள், ரஷ்யா-மேற்குலக நாடுகளிடையேயான மறைமுகப் போரை அடுத்தகட்ட ஆபத்தான நிலைக்குக் கொண்டு சென்றுள்ளன.