சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள சின்ன புதுக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் சிவபாலன். இவர் தனியார் சட்டக்கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். சிவபாலன் அதே பகுதியைச் சேர்ந்த தனது உறவினரான முருகேசன் என்பவரின் மகளைக் காதலித்து வந்துள்ளார். ஒரே ஊர் என்பதால் இவர்களது காதல் விவகாரம் பெண்ணின் குடும்பத்திற்குத் தெரியவந்து, அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
பெண்ணின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்த போதிலும் சிவபாலனும் அந்தப் பெண்ணும் காதலைக் கைவிடாமல் தொடர்ந்து பழகி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனிடையே, அப்பெண்ணின் தம்பியான அருண்ராஜா (19) இவர்களது காதலுக்குக் கடும் எதிர்ப்பாளராக இருந்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிவபாலன், காதலுக்கு இடையூறாக இருந்த பெண்ணின் தம்பியைத் தாக்குவதற்காகக் கத்தியுடன் சென்றதாகத் தெரிகிறது.
இதை அறிந்த பெண்ணின் தந்தை முருகேசன் மற்றும் அவரது உறவினர்கள், வழியிலேயே சிவபாலனைச் சூழ்ந்து மறித்துக் கத்தி மற்றும் அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் உடல் முழுவதும் பலத்த வெட்டுக் காயமடைந்த சிவபாலன், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியது.
தகவலறிந்து விரைந்து வந்த மானாமதுரை காவல்துறையினர், உயிரிழந்த சிவபாலனின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காகச் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், கொலையில் தொடர்புடைய பெண்ணின் தந்தை முருகேசன் மற்றும் தம்பி அருண்ராஜா ஆகிய இருவரையும் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.