Posted in

கடலுக்குள் புதிய அணு சக்தி: உலகை உலுக்கும் ரஷ்யாவின் புதிய நகர்வு

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தலைமையிலான நிர்வாகம், “போஸைடான்” (Poseidon) என்ற பேரழிவுத் திறன் கொண்ட அணுசக்தி ட்ரோன்களை ஏந்திச் செல்லும் அதிநவீன கபாரோவ்ஸ்க் (Khabarovsk) அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலை முதன்முறையாகக் கடல் சோதனைக்காக வெள்ளோட்டம் விட்டுள்ளது. ஒயிட் சீ (White Sea) கடல் பகுதியில் நடைபெற்று வரும் இந்தச் சோதனை, சர்வதேச அளவில் பெரும் பாதுகாப்பு அச்சுறுத்தலையும் கவனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சுமார் 10,000 டன் எடையும், 24 மீட்டர் நீளமுள்ள ‘போஸைடான்’ அணுசக்தி ட்ரோன்களை ஏந்திச் செல்லும் வகையில் சிறப்பு வடிவமைப்பையும் கொண்ட கபாரோவ்ஸ்க், ஒரே நேரத்தில் 6 போஸைடான் ஏவுகணைகளைச் சுமந்து செல்லும் திறன் படைத்தது. ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள பெல்கோரோட் (Belgorod) நீர்மூழ்கிக் கப்பலைப் போலன்றி, போஸைடான் ரக ஆயுதங்களை இயக்குவதற்காகவே இது பிரத்யேகமாகக் கட்டப்பட்டுள்ளது.

‘கியாமத் நாள் ஆயுதம்’ (Doomsday Weapon) என்று அழைக்கப்படும் இந்த போஸைடான் ட்ரோன்கள், எதிரி நாட்டின் கடற்கரையை அடைந்து வெடிக்கும் போது சுமார் 500 மீட்டர் உயரத்திற்கு ராட்சத ‘கதிர்வீச்சு சுனாமி’ அலைகளை உருவாக்கக்கூடியவை எனக் கூறப்படுகிறது. இவை 1,000 மீட்டர் ஆழத்தில் மணிக்கு 100 கி.மீ வேகத்தில் பயணிக்கக்கூடியவை என்பதால், வழக்கமான ரேடார் மற்றும் அக்வாடிக் தடுப்பு அமைப்புகளால் இவற்றைக் கண்டறிவது மிகவும் கடினம்.

உக்ரைன் போருக்கு நடுவே ரஷ்யா மேற்கொண்டு வரும் இந்த நடவடிக்கை, அமெரிக்கா மற்றும் நேட்டோ (NATO) படைகளுக்கு விடுக்கப்பட்ட மறைமுக எச்சரிக்கையாகப் பார்க்கப்படுகிறது. கடல் சோதனைகள் வெற்றிகரமாக முடிவடையும் பட்சத்தில், இந்த நீர்மூழ்கிக் கப்பல் ரஷ்யாவின் பசிபிக் கடற்படையில் (Pacific Fleet) அதிகாரப்பூர்வமாகச் சேர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.