இஸ்ரேலின் பிரபல நிழல் உலக தாதாவும், “காகசஸ் மாஃபியா” (Caucasian Jewish Mafia) அமைப்பின் தலைவருமான யானிஸ் யுஷ்வேவ் (Yanis Yushvaev – 40) பட்டப்பகலில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிசாரியா (Caesarea) பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் உள்ள உணவகம் ஒன்றிலிருந்து வெளியறியபோது, பின் தொடர்ந்து வந்த மர்ம நபர் ஒருவரால் அவர் மிக அருகில் வைத்துத் தலையில் சுடப்பட்டார்.
ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட யானிஸ் யுஷ்வேவ், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுவிட்ட நிலையில், தப்பியோடிய கொலையாளியைப் பிடிக்க இஸ்ரேல் காவல்துறை தீவிர தேடுதல் வேட்டையைத் தொடங்கியுள்ளது. இக்கொலை சம்பவம் தொடர்பான கண்காணிப்பு கேமரா காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
ஒர் அகிவா (Or Akiva) பகுதியைச் சேர்ந்த 40 வயதான யானிஸ் யுஷ்வேவ், இஸ்ரேலிய காவல்துறையின் குற்றப் பட்டியலில் முக்கிய நபராக இருந்துவந்துள்ளார். துப்பாக்கிச் சூடு, கையெறி குண்டு வீச்சு மற்றும் வாகனங்களுக்குத் தீ வைப்பு உள்ளிட்ட பல்வேறு வன்முறைச் சம்பவங்களில் இவர் மீது சந்தேகத்தின் அடிப்படையில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்த போதிலும், போதிய ஆதாரங்கள் இல்லாததால் எந்த வழக்குகளிலும் அவர் தண்டிக்கப்படவில்லை.
கடந்த காலங்களில் ஊடகங்களுக்கு அளித்த பேட்டிகளில், தான் ஒரு நேர்மையான தொழிலதிபர் என்றும், சொகுசு கார்களைப் பயன்படுத்துவதால் காவல்துறை தன் மீது வீண் சந்தேகம் கொள்வதாகவும் தெரிவித்திருந்தார். இருப்பினும், இஸ்ரேலில் இயங்கி வரும் காகசியன் யூத மாஃபியா கும்பலின் தலைவராகச் செயல்பட்டு வந்த இவரின் படுகொலை, நிழல் உலகக் குழுக்களுக்கு இடையேயான பழிக்குப் பழி போட்டியின் காரணமாக நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.