இங்கிலாந்தின் டீஸ்சைட் (Teesside) பகுதியில் உள்ள A66 நெடுஞ்சாலையில் எதிரெதிர் திசையில் கார் மோதி நிகழ்ந்த கொடூர விபத்தில் இரண்டு காவல் துறை அதிகாரிகள் உட்பட 7 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து, திட்டமிடப்பட்ட குற்றக் குழுக்கள் (Organised Crime) தொடர்பில் 12 பேரை கிளீவ்லேண்ட் காவல்துறை (Cleveland Police) கைது செய்துள்ளது. கைதானவர்களில் 19 முதல் 61 வயதுக்குட்பட்ட 9 ஆண்களும் 3 பெண்களும் அடங்குவர்.
கடந்த ஆகஸ்ட் 22-ஆம் தேதி அதிகாலை நேரத்தில், போலியான பதிவு எண்களைக் (Cloned Number Plates) கொண்ட வோக்ஸ்வேகன் பாஸாட் (Volkswagen Passat) ரக கார் ஒன்று A66 சாலையில் தவறான திசையில் அதிவேகமாக இயக்கப்பட்டது. அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையின் ஆயுதம் தாங்கிய ரோந்து வாகனம் மீது அந்தக் கார் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காவலாளர்கள் மேத்யூ பிளேட்ஸ் (37), டாம் க்ளாஃப் (38) மற்றும் காரில் பயணித்த 5 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
விசாரணையில், விபத்தில் சிக்கிய கார் சம்பவத்திற்கு முன்பாக மிட்டில்ஸ்பரோ பகுதியில் கட்டடங்களை மோதி சேதப்படுத்திய வோல்வோ (Volvo XC60) ரக காரோடு தொடர்புடையது என்பது தெரியவந்துள்ளது. மேலும் விபத்தில் உயிரிழந்த 5 நபர்களில் 4 பேருக்கு ஏற்கனவே குற்றப் பின்னணி இருப்பதும் காவல்துறையின் ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தின் பின்னணியில் சட்டவிரோத ஆயுதப் பயன்பாடு மற்றும் திட்டமிடப்பட்ட குற்றக் கும்பல்களின் சதித் திட்டம் இருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது. துப்பாக்கி வைத்திருத்தல், குற்றக் கும்பல்களின் நடவடிக்கைகளில் பங்கேற்றல் உள்ளிட்ட பல்வேறு விதிகளின் கீழ் 12 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.