Posted in

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மகிழ்ச்சி :அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்ட முக்கிய திட்டங்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது, துறை அமைச்சர் ராஜ்மோகன் அரசுப் பள்ளி மாணவர்களின் எதிர்காலத்தையும் நலனையும் கருத்தில் கொண்டு பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் உடல் ஆரோக்கியம், விளையாட்டில் ஆர்வம் மற்றும் தொழில்நுட்ப அறிவை மேம்படுத்தும் வகையில் பல்வேறு புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

குறிப்பாக, அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச சீருடையுடன் சேர்த்து ஸ்போர்ட்ஸ் ஜெர்சி மற்றும் டிராக் பேண்ட் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தோவாக்கப்பட்டு எளிதில் காயக்கூடிய இந்த ஆடைகள், குழந்தைகள் மைதானத்தில் தடையின்றி ஓடி விளையாடவும் தன்னம்பிக்கையை வளர்க்கவும் உதவும். மேலும், ‘ஒவ்வொரு நாளும் உடற்கல்வி வேலை’ (PE Period) உறுதிசெய்யப்பட்டு ‘ஓடி விளையாடு’ முன்னெடுப்பு மூலம் மாணவர்களின் விளையாட்டுத் திறன்கள் ஊக்குவிக்கப்படும்.

மாணவர்களின் புத்தகப் பை சுமையைக் குறைக்கும் வகையில் ‘மகிழ்வுடன் முன்னேறு’ திட்டத்தின் கீழ் மாதத்தில் ஒரு நாள் ‘நோ பேக் டே’ (No Bag Day) கடைப்பிடிக்கப்படும். அன்றைய தினம் பாடப் புத்தகங்கள் இன்றி கலை, நுண்கலை மற்றும் வாழ்வியல் கல்வியைக் குழந்தைகள் கற்றுக்கொள்வர். மேலும், ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை ‘தமிழ்நாடு தன்னிலை கற்றல் திட்டம்’ மூலம் செயற்கை நுண்ணறிவு (AI) சார்ந்த பாடத்திட்டம் 500 அரசு நடுநிலைப் பள்ளிகளில் முதற்கட்டமாக அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

இவற்றுடன், அரசுப் பள்ளி மாணவர்களின் கண், பல், காது பரிசோதனைகளுக்காக ‘ஒளிரும் புன்னகை’ திட்டம், பள்ளி வளாகங்களில் மின் விபத்துகளைத் தவிர்க்க ஆர்.சி.சி.பி (RCCB) பாதுகாப்பு கருவிகள் பொருத்தும் ‘பாதுகாப்பான பள்ளி’ திட்டம், செய்தித் தாள்களை வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்க ‘வாசிப்பை நேசிப்போம்’ திட்டம் உள்ளிட்ட பல்வேறு முற்போக்கான திட்டங்களை அமைச்சர் ராஜ்மோகன் அறிவித்துள்ளார்.