இங்கிலாந்தின் லண்டன் கேட்விக் (Gatwick) சர்வதேச விமான நிலையத்திற்கு அருகே உள்ள தனியார் வாகன நிறுத்துமிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சுமார் 140 கார்கள் முற்றிலும் எரிந்து நாசமாகின. கிராலி (Crawley) அருகே உள்ள கால்டைன் வணிகப் பூங்காவில் (Caldyne Business Park) அமைந்துள்ள இந்த நிறுத்துமிடத்தில், விடுமுறைக்காக வெளிநாடுகளுக்குச் சென்ற பயணிகள் தங்களது வாகனங்களை நிறுத்திவிட்டுச் சென்றிருந்த நிலையில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சனிக்கிழமை இரவு 9 மணியளவில் ஏற்பட்ட இந்தத் தீ விபத்து, வேகமாகப் பரவி அப்பகுதி முழுவதையும் கரும் புகையால் சூழ்ந்தது. தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து பல மணி நேரம் போராடித் தீயைக் கட்டுப்படுத்தினர். இந்த விபத்தினால் அருகிலுள்ள சுமார் 2,000 வீடுகளுக்கு மின் விநியோகம் தற்காலிகமாகப் பாதிக்கப்பட்டது. நல்வாய்ப்பாக இச்சம்பவத்தில் உயிரிழப்போ அல்லது காயங்களோ ஏற்படவில்லை என மேற்கு சசெக்ஸ் தீயணைப்பு மற்றும் மீட்புப் படை உறுதி செய்துள்ளது.
வெளிநாடுகளில் இருந்து திரும்பும் பயணிகள் தங்களது கார்களின் தற்போதைய நிலை குறித்து அறிய முடியாமல் கடும் அதிர்ச்சியிலும் குழப்பத்திலும் ஆழ்ந்துள்ளனர். இந்த விபத்து தொடர்பாக 67 வயது முதியவர் ஒருவரை சசெக்ஸ் காவல்துறையினர் (Sussex Police) தீவைப்புச் சந்தேகத்தின் (Arson) அடிப்படையில் கைது செய்து, பின்னர் பிணையில் விடுவித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்து நிகழ்ந்த வாகன நிறுத்துமிடம் கேட்விக் விமான நிலைய நிர்வாகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கக்கூடியது அல்ல என்றும், அது மூன்றாம் தரப்பு தனியார் நிறுவனத்தால் பராமரிக்கப்பட்டு வந்தது என்றும் விமான நிலைய செய்தித் தொடர்பாளர் விளக்கமளித்துள்ளார். கார்களை நிறுத்தியிருந்த பயணிகள் உடனடியாகத் தங்களது வாகன நிறுவனங்கள் மற்றும் காவல்துறையைத் தொடர்புகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.