போர்க்களத்தில் மனிதர்களின் எந்தவொரு கட்டளையும் இன்றி, சுயமாகவே இலக்குகளைக் கண்டறிந்து தாக்கி அழிக்கும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் கொண்ட ‘கொலையாளி ட்ரோன்கள்’ பயன்படுத்தப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரபல அறிவியல் புனைகதை திரைப்படமான ‘டெர்மினேட்டர்’ (Terminator) பாணியில், மனிதர்களின் நேரடி கண்காணிப்பு இல்லாமல் இயங்கும் இந்த ட்ரோன் சோதனைகள் குறித்த விவரங்கள் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளன.
உக்ரைனின் ஏரோ சென்டர் (Aero Center) நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி அலெக்சாண்டர் கொகனோவ்ஸ்கி அளித்த தகவலின்படி, பக்முத் மற்றும் சசிவ் யார் பகுதிகளுக்கு அருகே 10 AI குவாட்காப்டர் ட்ரோன்கள் சோதனை முயற்சியாகப் பறக்கவிடப்பட்டன. ‘டெர்மினேட்டர் மோட்’ (Terminator Mode) எனக் குறிப்பிடப்படும் இந்த அமைப்பில், குறிப்பிட்ட எல்லைக்குள் நுழையும் ட்ரோன்கள் கேமராக்கள் மற்றும் AI உதவியுடன் எதிரிகளின் நடமாட்டத்தைக் கண்டறிந்து தானாகவே சென்று வெடித்துச் சிதறும்.
ரஷ்யப் படைகள் தீவிரமாகப் பயன்படுத்தி வரும் ரேடார் மற்றும் ஜி.பி.எஸ் சிக்னல் ஜாமர்களைத் (GPS Jamming) தாண்டிச் செயல்படுவதற்காகவே இத்தகைய தன்னிச்சையான தொழில்நுட்பங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. சிக்னல் தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டாலும், இலக்குகளைத் துல்லியமாகக் கண்டறிந்து தாக்கும் வல்லமை கொண்ட இந்த ட்ரோன்கள், மனித ஆபரேட்டர்களின் வழிகாட்டுதல் இன்றி தன்னிச்சையாக முடிவெடுப்பது மனிதகுலத்திற்குப் பேரபாயமாக உருவெடுத்துள்ளது.
இராணுவ ரீதியாக இது உத்திசார் வெற்றியாகப் பார்க்கப்பட்டாலும், மனிதர்களின் தலையீடு இல்லாமல் இயந்திரங்களே உயிர்களைப் பறிக்கும் அதிகாரத்தைப் பெறுவது சர்வதேச மனிதநேயச் சட்டங்களுக்கு எதிரான கேள்விகளை எழுப்பியுள்ளது. இத்தகைய ‘தானியங்கி கொலையாளி ஆயுதங்களுக்கு’ (Lethal Autonomous Weapons) உலகளாவிய தடை விதிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் மனித உரிமை ஆர்வலர்களிடையே மீண்டும் தீவிரமடைந்துள்ளது.