Posted in

என் வேலையே போச்சு.. போலீஸை அடிச்சது தப்பு தான்: தஞ்சாவூரில் கைதாகி விடுவிக்கப்பட்ட இளைஞரின் ஆவேசப் பேட்டி!

தஞ்சாவூரில் சாலை மறியல் போராட்டத்தின் போது சிறப்பு உதவி ஆய்வாளரை (SSI) அறைந்த சம்பவத்தில் கைதாகி பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்ட விகார் பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் என்ற இளைஞர், தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து அளித்துள்ள பேட்டி சமூக வலைத்தளங்களில் பெரும் வைரலாகி வருகிறது. “ஆத்திரத்தில் போலீஸை அடித்தது மிகப்பெரிய தவறுதான்; ஆனால் அந்த சூழ்நிலை என்னை அப்படிச் செய்ய வைத்துவிட்டது” என்று அவர் கதறி அழுதுள்ளார்.

சம்பவத்தன்று தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகம் அருகே அரசியல் கட்சியினரின் சாலை மறியல் காரணமாகப் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தான் அவசரமாக இருசக்கர வாகனத்தில் செல்ல முயன்ற போது ஏற்பட்ட வாக்குவாதத்தில், காவல்துறையினர் தன்னைக் காக்காமல் சிறப்பு உதவி ஆய்வாளர் அப்துல் ரஹீம் என்பவர் தன்னைக் கன்னத்தில் அறைந்ததால், ஆத்திரத்தில் பதிலுக்குத் தானும் அறைந்துவிட்டதாக ஆகாஷ் தனது வாக்குமூலத்தில் தெரிவித்தார்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து ஆகாஷ் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உடனடி கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்தத் திடீர் சம்பவத்தால் தனது தனியார் வேலை பறிபோய்விட்டதாகவும், தனது எதிர்காலமே கேள்விக் குறியாகிவிட்டதாகவும் ஆகாஷ் வேதனையுடன் தெரிவித்துள்ளார். காவல் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுவதோ அல்லது சட்டத்தைக் கையில் எடுப்பதோ எவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்து கொண்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.