சீனா-நேபாள எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவு மற்றும் பனிப்பாறைச் சரிவைத் தொடர்ந்து, போதே கோசி (Bhote Koshi) ஆற்றில் உருவான காட்டாற்று வெள்ளத்தால் நேபாளத்தின் வடக்கு மாவட்டங்கள் முற்றிலும் நிலைகுலைந்துள்ளன. இந்த பேரழிவில் சிக்கி இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 95 ஆக உயர்ந்துள்ளதாக நேபாளக் காவல்துறை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. மேலும், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டும், தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டும் 579-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
குறிப்பாக, கைலாஷ் மானசரோவர் புனித யாத்திரை சென்ற 59 பக்தர்கள் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் (NRI) உட்பட 133 இந்தியர்கள் தற்போது வரை தொடர்பை இழந்து மாயமாகியுள்ளனர். ரசுவா (Rasuwa) மாவட்டத்தில் உள்ள வணிக நகரங்கள், எல்லைச் சுங்கச் சாவடிகள், 3 காவல் நிலையங்கள் மற்றும் 12-க்கும் மேற்பட்ட நீர்மின் நிலையங்களின் கட்டமைப்புப் பகுதிகள் இந்த வெள்ளத்தின் சீற்றத்தால் முற்றிலுமாக அடித்துச் செல்லப்பட்டு அழிந்துள்ளன.
சம்பவ இடத்தில் நேபாள ராணுவம் மற்றும் பாதுகாப்புப் படையினர் 30-க்கும் மேற்பட்ட ஹெலிகாப்டர்கள் மற்றும் அதிநவீன ட்ரோன்களைப் பயன்படுத்தி தீவிர மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இமயமலைப் பகுதியில் நிலவும் மோசமான வானிலை மற்றும் மின்சார முடக்கம் காரணமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளை அடைவதில் மீட்புக் குழுவினருக்குப் பெரும் சவால்கள் நிலவுகின்றன. மாயமான இந்தியர்களைத் தொடர்புகொள்ளக் காத்மாண்டுவில் உள்ள இந்தியத் தூதரகம் 24 மணி நேர அவசரக் உதவி எண்களை (977 9851316807 / 977 9709107500) அறிவித்துள்ளது.
நேபாளத்தில் கரைபுரண்டு ஓடும் இந்த வெள்ள நீர் நாராயணி மற்றும் கண்டக் ஆறுகள் வழியாக இந்திய எல்லையை நோக்கிப் பாய்ந்து வருவதால், பீகார் மற்றும் உத்தரப் பிரதேச மாநிலங்களின் எல்லை யோர மாவட்டங்களுக்குத் தீவிர வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாதிப்பு சாத்தியமுள்ள பகுதிகளில் தேசியப் பேரிடர் மீட்புப் படையின் (NDRF) 6 குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு, இந்தியப் பகுதியிலும் தீவிர கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.