Posted in

நேபாள எல்லையைச் சூறையாடிய பேரழிவு வெள்ளம்: 72 பேர் பலி, அமெரிக்கர்கள் உட்பட 380-க்கும் மேற்பட்டோர் மாயம்!

சீனா மற்றும் நேபாள எல்லையோரப் பகுதியில் அமைந்துள்ள கேரோங் (Gyirong) சுங்கச் சாவடி மற்றும் ரசுவா மாவட்டத்தில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவு மற்றும் காட்டாற்று வெள்ளப்பெருக்கு, அந்தப் பகுதியையே சுடுகாடாக மாற்றியுள்ளது. இடிபாடுகள் மற்றும் களிமண் கலந்த வெள்ள நீர் வினாடிகளில் பேரலை போலக் கரைபுரண்டு வந்ததில் இதுவரை 72 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், கைலாஷ் மானசரோவர் யாத்திரை சென்ற இந்தியர்கள், 3 அமெரிக்கர்கள், பிரிட்டிஷ் மற்றும் மலேசிய நாட்டினர் உட்பட 384-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் மாயமாகியுள்ளதாக அதிகாரப்பூர்வத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

திபெத் எல்லையை ஒட்டியுள்ள போதே கோசி (Bhote Koshi) ஆற்றின் பகுதியில் ஏற்பட்ட பெரும் பாறைச்சரிவு காரணமாகவே இந்த இமாலயப் பேரழிவு சம்பவித்துள்ளது. சீன எல்லைப் பகுதியான கேரோங் துறைமுகத்தில் வீடுகள், வணிக வளாகங்கள் மற்றும் வீதிகள் வெள்ளத்தில் மூழ்கும் பயங்கரக் காட்சிகள் அங்குள்ள கேமராக்களில் பதிவாகி இணையத்தில் வெளியாகி நெஞ்சை நடுங்க வைத்துள்ளன. வெள்ளத்தின் சீற்றத்தால் பாலம், மின்சாரக் கம்பங்கள் மற்றும் வீதிகள் அடித்துச் செல்லப்பட்டதால் அண்டை நாடுகளுக்கிடையேயான முக்கிய வர்த்தகப் பாதையும் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.

நிலச்சரிவு ஏற்பட்ட இடத்திற்கு நேபாள ராணுவமும் சீனப் மீட்புக் படைகளும் உடனடியாக விரைந்து சென்று ஹெலிகாப்டர்கள் மற்றும் அதிநவீன ட்ரோன்கள் மூலம் தீவிர மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. ஆனால், திபெத் மற்றும் நேபாள எல்லைப் பகுதிகளில் தொலைத்தொடர்பு மற்றும் மின்சார இணைப்புகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளதால், மாயமான சுற்றுலாப் பயணிகளைத் தொடர்புகொள்வதில் மீட்புக் குழுவினருக்குப் பெரும் சவால்கள் நிலவி வருகின்றன.

இந்த பேரழிவில் படுகாயமடைந்த 114-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இமயமலைப் பிராந்தியத்தில் ஏற்பட்டு வரும் காலநிலை மாற்றம் மற்றும் பனிப்பாறைகள் வேகமாக உருகுவதே இத்தகைய தொடர் இயற்கை சீற்றங்களுக்குக் காரணம் எனச் சுற்றுச்சூழல் வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், நிலமை இன்னமும் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.