மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நீடித்து வரும் தீவிர மோதல்கள் காரணமாகப் முடக்கப்பட்ட சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ‘ஹோர்முஸ் ஜலசந்தி’ (Strait of Hormuz) கடல் வழியைத் தற்காலிகமாகத் திறப்பது குறித்து ஈரானும் ஓமன் சுல்தானகமும் முக்கிய உடன்பாட்டை எட்டியுள்ளன. உலகளவில் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு போக்குவரத்திற்கு மிக முக்கிய அமைவிடமாகத் திகழும் இந்தச் சலசந்தியில் 7 மைல் அகலம் கொண்ட தற்காலிக நாவாய் வழியை அமைத்து, வணிகக் கப்பல்களின் போக்குவரத்தைச் சீரமைக்க இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன.
ஈரானிய வெளியுறவுத்துறை அமைச்சகம் மற்றும் ஓமன் பிரதிநிதிகளுக்கு இடையே தெஹ்ரானில் நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனைகளைத் தொடர்ந்து இந்தத் தற்காலிகக் கட்டமைப்பு முன்வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வளைகுடா பகுதிக்குள் நுழையும் கப்பல்கள் ஈரானிய எல்லைக் கடல் வழியையும், வெளியேறும் கப்பல்கள் ஓமன் எல்லைக் கடல் வழியையும் பயன்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், நீண்டகாலப் மோதலால் அப்பகுதியில் அச்சுறுத்தலாக விளங்கும் கடல் கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளை இரு நாடுகளும் இணைந்து மேற்கொள்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
இருப்பினும், இந்த உடன்பாடானது ஹோர்முஸ் ஜலசந்தியை முழுமையாகத் திறப்பதற்கான நிரந்தரத் தீர்வு அல்ல என்றும், இதுவொரு தற்காலிக ஏற்பாடு மட்டுமே என்றும் ஈரானிய வெளியுறவுத்துறை தெளிவுபடுத்தியுள்ளது. அமெரிக்கா தங்கள் மீதான தடைகளை நீக்கி, முந்தைய உடன்படிக்கை நிபந்தனைகளை முழுமையாக ஏற்றுக்கொள்ளும் வரை ஹோர்முஸ் ஜலசந்தியின் முழுமையான கட்டுப்பாடு ஈரானிய படைகளின் வசமே இருக்கும் என ஈரான் புரட்சிகர காவல் படை (IRGC) திட்டவட்டமாக எச்சரித்துள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் மோதல் வெடித்ததிலிருந்து உலகளவில் நுகரப்படும் கச்சா எண்ணெய்யில் ஐந்தில் ஒரு பங்கு பயணிக்கும் இந்த கடல் பாதை முடக்கப்பட்டதால் சர்வதேசச் சந்தையில் எரிபொருள் விலைகள் ஏற்ற இறக்கத்தைச் சந்தித்து வந்தன. தற்போது ஓமனின் மத்தியஸ்தத்தில் ஈரானுடன் தற்காலிகப் பாதை உடன்பாடு எட்டப்பட்டுள்ள செய்தி சர்வதேச அளவில் எண்ணெய் சந்தையில் லேசான நிம்மதியையும், கச்சா எண்ணெய் விலையில் சிறு சரிவையும் ஏற்படுத்தியுள்ளது