Posted in

டிஃபென்டர் கார் இருக்கும்போது முதல்வரிடம் கார் கேட்டேனா?: சர்ச்சைகளுக்குத் தவெக எம்.எல்.ஏ சபரி ஐங்கரன் விளக்கம்!

தமிழகச் சட்டமன்றத்தில் உறுப்பினர்களுக்கான வசதிகள் மற்றும் வாகனப் படிகள் தொடர்பான விவாதங்களின் போது, தான் இன்னமும் பேரவைக்கு ஆட்டோவில்தான் வந்து செல்வதாகவும், ஐடி கார்டைக் காட்டினாலும் காவலர்கள் எம்.எல்.ஏ என நம்ப மறுப்பதாகவும் தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) பெரியகுளம் தொகுதி எம்.எல்.ஏ சபரி ஐங்கரன் பேசியிருந்தார். இவரது இந்தப் பேச்சு சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவிய நிலையில், அவருக்குச் சொந்தமாக ரூ. 30 லட்சம் மதிப்பிலான சொகுசு கார் மற்றும் டிஃபென்டர் கார் இருப்பதாகக் கூறி நெட்டிசன்களும் எதிர்க்கட்சியினரும் கேள்விகளை எழுப்பிச் சர்ச்சையை உருவாக்கினர்.

இந்நிலையில், தன் மீது சுமத்தப்பட்ட இந்த டிஃபென்டர் கார் சர்ச்சைக்குத் தவெக எம்.எல்.ஏ சபரி ஐங்கரன் செய்தியாளர்கள் சந்திப்பில் வெளிப்படையான விளக்கமளித்துள்ளார். “எனக்குச் சொந்தமாக டிஃபென்டர் போன்ற அதிநவீன சொகுசு கார் இருக்கும் பட்சத்தில், நான் எதற்காகச் சட்டமன்றத்தில் முதலமைச்சரிடம் கார் வசதி கேட்டுப் பேசப் போகிறேன்?” என்று வினா தொடுத்த அவர், தன் மீது பரப்பப்படும் தகவல்கள் முற்றிலும் தவறானவை என்றும் உண்மைக்கு மாறானவை என்றும் மறுத்துள்ளார்.

மேலும் பேசிய அவர், “நான் எனது வேட்புமனு மற்றும் சொத்து விவரப் பிரமாணப் பத்திரத்திலேயே எனது குடும்ப வாகன விவரங்களைத் துல்லியமாகக் குறிப்பிட்டுள்ளேன். எதையும் மறைக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. தொகுதி மக்களுடனான நெருக்கமான தொடர்பைப் பேணவும், எளிய மனிதனாகச் சாமானியர்களின் தேவைகளை உணர்ந்து செயல்படவுமே நான் சென்னை பேரவைக்கு வரும்போது ஆட்டோ மற்றும் எளிய போக்குவரத்து முறைகளைப் பயன்படுத்தி வருகிறேன்” என்று தனது தரப்பு நியாயத்தைச் சுட்டிக்காட்டினார்.

முதலமைச்சர் விஜய் அவர்களின் அறிவிப்பின் மூலம் எம்.எல்.ஏ-க்களுக்கு வழங்கப்படவுள்ள வாகன வசதி அறிவிப்புக்கு நன்றி தெரிவிக்கும் நோங்கிலேயே தனது கடந்த கால எளிய அனுபவங்களைச் நகைச்சுவையாகப் பகிர்ந்ததாகக் கூறிய அவர், அரசியல் லாபத்திற்காகத் தனது பேச்சைத் திரித்து விமர்சிப்பது ஏற்புடையதல்ல என்றார். சபரி ஐங்கரனின் இந்த முற்றுப்புள்ளி விளக்கம் தவெக தொண்டர்கள் மத்தியிலும் சமூக வலைத்தளங்களிலும் புதிய விவாதத்தைத் தோற்றுவித்துள்ளது.