1990-களில் போஸ்னியாவில் நடைபெற்ற கொடூரமான இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்களின் பிரதான சூத்திரதாரியும், ‘போஸ்னியாவின் கொடூரக் கொலையாளி’ (Butcher of Bosnia) என்று உலகளவில் அழைக்கப்பட்ட முன்னாள் போஸ்னிய செர்பிய ராணுவத் தளபதி ரட்கோ மிலாடிச் (Ratko Mladić – 84), தி ஹேக் (The Hague) நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சிறை மருத்துவமனையில் காலமானார். முடக்குவாதம் மற்றும் வயது மூப்பு சார்ந்த உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த அவரது மரணத்தைச் சர்வதேச நீதிமன்ற அதிகாரிகள் மற்றும் செர்பிய ஊடகங்கள் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளன.
1992 முதல் 1995 வரை நடைபெற்ற போஸ்னியப் போரின் போது, போஸ்னிய முஸ்லிம்கள் மற்றும் குரோஷிய இன மக்களை முற்றிலுமாக அழித்தொழிக்கும் நோக்கில் செயல்பட்ட மிலாடிக்கின் படைகள், சரஜெவோ (Sarajevo) நகரை 43 மாதங்களுக்கும் மேலாக முற்றுகையிட்டு பல்லாயிரக்கணக்கான பொதுமக்களைக் கொன்று குவித்தன. குறிப்பாக 1995-இல் ஸ்ரெப்ரெனிகாவில் (Srebrenica) 8,000-க்கும் மேற்பட்ட முஸ்லிம் ஆண்களையும் சிறுவர்களையும் கொடூரமாகப் படுகொலை செய்த கொடூரம், இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஐரோப்பா கண்ட கண்ட மிக மோசமான இனப்படுகொலையாகப் பதிவானது.
போர் முடிவடைந்த பிறகு குற்றச்சாட்டுகளிலிருந்து தப்பிக்க சுமார் 16 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த மிலாடிச், கடந்த 2011-ஆம் ஆண்டு செர்பியாவில் கைது செய்யப்பட்டு சர்வதேசக் குற்றவியல் தீர்ப்பாயத்திடம் (ICTY) ஒப்படைக்கப்பட்டார். 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க விசாரணையில், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள், இனப்படுகொலை மற்றும் போர் விதிமுறை மீறல்கள் உட்பட 10 பிரிவுகளில் அவர் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு இறுதி மூச்சு வரை சிறையில் அடைக்கப்பட வேண்டும் என்ற ஆயுள் தண்டனை உறுதி செய்யப்பட்டது.
தன் வாழ்நாளின் கடைசி வரை தான் செய்த கொடூர படுகொலைகளுக்காக எவ்வித மனவருத்தமோ அல்லது வருத்தமோ தெரிவிக்காத மிலாடிக்கின் மரணம், போஸ்னியப் போரில் தங்களது சொந்தங்களை இழந்து தவித்த ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு ஒரு வரலாற்று நீதியின் நிறைவாகப் பார்க்கப்படுகிறது. இருப்பினும், அவர் செய்த கொடூரங்கள் மற்றும் அழிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மனித உயிர்களின் வடுக்கள் வரலாற்றுச் சுவடுகளில் நீங்காத வடுவாக நிலைத்து நிற்கும் என உலக மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன.