ஐரோப்பிய நாடான ருமேனியாவின் கருங்கடல் (Black Sea) கடற்கரையோரம் அமைந்துள்ள பிரபல நவோதாரி (Năvodari) சுற்றுலாத் தலத்தில், கடலில் மிதந்து வந்த ராணுவ ட்ரோன் ஒன்றை ஆபத்தை அறியாமல் இரு சுற்றுலாப் பயணிகள் கரைக்கு இழுத்து வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாதாரணமாக உடைந்த உலோகப் பொருள் என நினைத்து அவர்கள் செய்த இந்த விபரீத செயல், அங்கு திரண்டிருந்த நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகளின் உயிரைப் பணயம் வைப்பதாக மாறியுள்ளது.
கடல் அலைகளில் அடித்து வரப்பட்ட அந்த பிரம்மாண்டமான உலோக ட்ரோன் பாகத்தை இரு நபர்கள் கைகளால் பிடித்துக் கரைக்கு இழுத்து வரும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகின. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ருமேனிய அவசரகால மீட்புப் படையினரும் (ISU) கடற்படை வெடிகுண்டு அகற்றும் நிபுணர்களும் (EOD) அப்பகுதியைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து சுற்றுலாப் பயணிகளை உடனடியாக வெளியேற்றினர்.
ஆரம்பகட்ட சோதனையில், கடலில் மிதந்து வந்த அந்த ட்ரோன் பாகத்தில் வெடிமருந்துகள் (Explosive Payload) நிரப்பப்பட்டிருந்தது உறுதி செய்யப்பட்டது. உக்ரைன்-ரஷ்ய போர்ப் பிராந்தியத்தில் பயன்படுத்தப்பட்டுத் திசைமாறி வந்த இந்த ராணுவ ட்ரோன், நீரில் மூழ்கியிருந்ததால் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கும் அபாயகரமான நிலையில் இருந்தது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து, வெடிகுண்டு நிபுணர்கள் பாதுகாப்பான முறையில் அந்த ட்ரோனைச் செயலிழக்கச் செய்து கட்டுப்படுத்தப்பட்ட முறையில் வெடித்துச் சிதறடித்தனர்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து ருமேனிய அரசு கடலோரப் பகுதிகளில் எச்சரிக்கையைத் தீவிரப்படுத்தியுள்ளது. “கடற்கரையிலோ அல்லது கடலிலோ அடையாளம் தெரியாத உலோகப் பொருட்கள் மற்றும் ட்ரோன் பாகங்கள் மிதந்து வந்தால் பொதுமக்கள் சுயமாக இறங்கி அவற்றைச் தொடவோ அல்லது கரைக்கு இழுக்கவோ கூடாது” என்றும், உடனடியாக அவசர உதவி எண் 112-ஐத் தொடர்புகொள்ள வேண்டும் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். கருங்கடல் பகுதியில் போர் தீவிரமடைந்துள்ள சூழலில், சுற்றுலாப் பகுதியில் நடந்த இச்சம்பவம் ஐரோப்பிய நாடுகளிடையே புதிய பாதுகாப்புக் கவலையை உருவாக்கியுள்ளது.