Posted in

கரப்பான்பூச்சி கட்சி தேர்தலில் போட்டியிட்டால் ஓட்டு போடுவீங்களா? இந்தியா டுடே சர்வேயின் அதிரடி முடிவுகள்!

இந்தியாவில் நீட் (NEET) தேர்வுத் தாள் கசிவு விவகாரம் மற்றும் இளைஞர்களின் வேலைவாய்ப்பின்மைப் பிரச்சனைகளை முன்வைத்து உருவாகி, நாடு முழுவதும் மிகப்பெரிய கவனத்தை ஈர்த்த “கரப்பான்பூச்சி ஜன்டா கட்சி” (Cockroach Janta Party – CJP) ஒரு அதிகாரப்பூர்வ அரசியல் கட்சியாக மாறி தேர்தலில் போட்டியிட்டால் மக்கள் வாக்களிப்பார்களா என்பது குறித்த ‘இந்தியா டுடே – சி-வோட்டர்’ (India Today – CVoter) அமைப்பின் ‘மூட் ஆஃப் தி நேஷன்’ (Mood of the Nation) கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.
இந்தக் கருத்துக்கணிப்பின் முடிவுகளின்படி, கரப்பான்பூச்சி கட்சி தேர்தலில் போட்டியிட்டால் அதற்கு வாக்களிக்க மாட்டோம் என்று 43% மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதேவேளையில், இக்கட்சிக்கு ஆதரவாக 33% மக்கள் வாக்களிக்கத் தயார் எனக் கூறியுள்ளது பாரம்பரிய அரசியல் கட்சிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், 24% மக்கள் இப்போதைக்கு எந்தவொரு முடிவையும் தெரிவிக்காமல் நடுநிலை வகிப்பதாக இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
அதேநேரத்தில், சிஜேபி இயக்கம் ஒரு நேரடி அரசியல் கட்சியாக மாறாமல், அரசைத் தட்டிக்கேட்கும் அழுத்தக் குழுவாகவே (Pressure Group) தொடர்வது தான் சரி என 39% மக்கள் வரவேற்பு அளித்துள்ளனர். மாறாக, அவர்கள் முழு நேர அரசியல் கட்சியாக மாறியிருக்க வேண்டும் என 26% பேரும், இது குறித்துக் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என 34% பேரும் கூறியுள்ளனர். இது போராட்டங்கள் மூலம் மக்கள் கவனத்தை ஈர்ப்பதற்கும், அதை நேரடியாகத் தேர்தல் வாக்குகளாக மாற்றுவதற்கும் இடையே உள்ள பெரும் இடைவெளியைக் காட்டுவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆரம்பத்தில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியின் கருத்திற்கு எதிராக ஒரு நையாண்டி அமைப்பாகத் தொடங்கி, பின்னர் மாணவர்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு உரிமைகளுக்காக டெல்லி வரை மாபெரும் போராட்டங்களை நடத்தி வெற்றி கண்ட இந்த அமைப்பு, தேர்தல் அரசியலில் இறங்காமல் மக்கள் நலனுக்கான அழுத்தக் குழுவாகச் செயல்பட எடுத்த முடிவே சரி என்பதை இந்த சர்வே முடிவுகள் உறுதிப்படுத்துவதாகத் தெரிகிறது.