அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலத்தில் உள்ள ‘யோனா மலை’ (Mount Yonah) செங்குத்துப் பாறையில், சுமார் 260 அடி உயரத்தில் வெறும் 20 அங்குல குறுகிய விளிம்பில் (Ledge) மாட்டிக்கொண்ட மலையேற்ற வீரர் ஒருவர், மரண பயம் நிறைந்த அந்த இக்கட்டான தருணத்திலும் தனது செல்போனை நோண்டிக் கொண்டிருந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி விமர்சனங்களைக் கிளப்பியுள்ளது.
பாதுகாப்பு உபகரணங்கள் ஏதுமின்றித் தனியாக மலையேறும் ‘ஃப்ரீ கிளம்பிங்’ (Free-climbing) முயற்சியில் ஈடுபட்ட அந்த வீரர், மேலே செல்லவும் முடியாமல் கீழே இறங்கவும் இயலாமல் ஆபத்தான பாறை விளிம்பில் சிக்கிக் கொண்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்புக் குழுவினர், முதலில் டிரோன் கேமராக்கள் (Drone) மூலம் அவர் இருக்கும் இடத்தை மிகத் துல்லியமாகக் கண்டறிந்தனர்.
டிரோன் கேமராவில் பதிவான காட்சிகளைப் பார்த்த மீட்புக் குழுவினர் கடும் அதிர்ச்சியடைந்தனர். ஏனெனில், எந்த நேரத்திலும் கீழே விழுந்தால் உயிர் பிழைக்க முடியாத சூழலில், ஒரு சிறிய பாறைத் திட்டசில் கால்களை ஊன்றி நின்று கொண்டிருந்த அந்த நபர், எந்தவித அச்சமுமின்றி மிகவும் கூலாகத் தனது செல்போனைப் பார்த்துக்கொண்டிருந்தார். உயிரைக் கையில் பிடித்துக் கொண்டிருக்கும் வேளையிலும் ஸ்மார்ட்போன் மோகத்தைக் கைவிடாத அவருடைய இந்தச் செயல் ‘முட்டாள்தனத்தின் உச்சம்’ என நெட்டிசன்களால் விமர்சிக்கப்பட்டு வருகிறது.
சுமார் 42 நிமிடங்கள் நீடித்த இந்த ஆபத்தான மீட்புப் போரில், கயிறு அமைப்புகளைப் பயன்படுத்தித் தீயணைப்பு வீரர் ஒருவர் செங்குத்துப் பாறையிலிருந்து கீழே இறங்கி, அந்த நபரைக் கயிற்றில் கட்டிப் பத்திரமாக மீட்டார். அதிர்ஷ்டவசமாக எந்தக் காயமுமின்றி உயிர் தப்பிய அந்த வீரரின் பொறுப்பற்ற செயலையும், அவரைப் பத்திரமாக மீட்ட மீட்புக் குழுவினரின் திறமையையும் சுட்டிக்காட்டி இணையத்தில் பல்வேறு கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன.