தமிழ்நாடு சட்டமன்றத்தில் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது, தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு குறித்துத் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சட்டமன்ற உறுப்பினர் தெரிவித்த கருத்துக்கள் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளன. சோழவந்தான் தொகுதி தவெக எம்.எல்.ஏ கருப்பையா, ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்கப்பட்டதை விமர்சித்து அவையில் பேசிய பேச்சுக்குக் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
சட்டப்பேரவையில் விவாதத்தின் போது பேசிய தவெக உறுப்பினர் கருப்பையா, “அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலை கடந்த 10 ஆண்டுகளாக மூடப்பட்டுக் கிடக்கிறது. ரூ.50 கோடி நிதி ஒதுக்கி அந்த ஆலையை மீண்டும் திறந்திருக்கலாம். அதை விட்டுவிட்டு இளைஞர்களையும் சமுதாயத்தையும் சீரழிக்கக்கூடிய ஒரு ஜல்லிக்கட்டு மைதானத்திற்கு அவ்வளவு தொகையைச் செலவழித்திருக்கத் தேவையில்லை” என்று குறிப்பிட்டார். ஜல்லிக்கட்டு விளையாட்டை இளைஞர்களைச் சீரழிக்கும் ஒன்றாக அவர் சித்தரித்துப் பேசியது அவையில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இதற்கு உடனடியாகப் பதிலளித்துப் பேசிய திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் தொன்மையான பண்பாடு மற்றும் வீரத்தின் அடையாளம் என்றும், அதைப் பெருமைப்படுத்தவே புதிய மைதானம் கட்டப்பட்டது என்றும் கூறினார். இருப்பினும், தவெக அமைச்சர் நிர்மல் குமார் குறுக்கிட்டு, ஊருக்கு வெளியே கட்டப்பட்ட மைதானத்தால் எந்தப் பிரயோஜனமும் இல்லை என வாதிட்டார். இதைத் தொடர்ந்து, “தமிழர்களின் பண்பாட்டையும் தியாகத்தையும் கொச்சைப்படுத்தும் வகையில் தவெக அரசு செயல்படுகிறது” என திமுக ஐடி விங் மற்றும் பிற அரசியல் இயக்கங்கள் கடுமையாகத் தாக்கிப் பதிவிட்டு வருகின்றன.
வீரத்தின் அடையாளமாகத் திகழும் ஜல்லிக்கட்டை அவமதிக்கும் வகையில் தவெக சட்டமன்ற உறுப்பினர் பேசியிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், தமிழ் மண்ணின் மாண்பைக் கேள்விக்குறியாக்கும் இந்தப் போக்கை தவெக அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் சமூக வலைத்தளங்களில் கண்டனங்கள் வலுத்து வருகின்றன. அலங்காநல்லூர் பகுதியைத் தொகுதிக்குள் வைத்திருக்கும் ஒரு மக்கள் பிரதிநிதியே இவ்வாறு பேசியிருப்பது தென் மாவட்ட மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.