தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், சென்னை புழல் மத்திய சிறைச்சாலை மற்றும் அதனை அடுத்துள்ள காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை காலை திடீர் ஆய்வு மேற்கொண்டார். அரசு மருத்துவமனைகள், மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் குடிநீர் சுத்திகரிப்பு ஆலைகளில் தொடர்ந்து முன்னறிவிப்பின்றி ஆய்வு நடத்தி வரும் அவர், அதன் தொடர்ச்சியாகச் சிறைத்துறை மற்றும் காவல்துறையின் செயல்பாடுகளை நேரில் சென்று பார்வையிட்டது மக்கள் மற்றும் அதிகாரிகளிடையே பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
புழல் மத்திய சிறை வளாகத்திற்கு நேரில் சென்ற முதலமைச்சர் விஜய்யை, சிறைத்துறை உயர் அதிகாரிகள் நேரில் வரவேற்றனர். அங்குள்ள தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ள பகுதிக்கு நேரில் சென்ற முதல்வர், கைதிகளிடம் “உங்களை இங்கு சரியாகக் கவனித்துக் கொள்கிறார்களா? ஏதேனும் குறைகள் இருக்கிறதா?” என விரிவாகக் கேட்டறிந்தார். மேலும், கைதிகளுக்கு வழங்கப்படும் உணவு முறை, சமையலறைப் பகுதி, மருத்துவ வசதிகள் மற்றும் அடிப்படை சுகாதார வசதிகளையும் அவர் நேரில் பார்வையிட்டு அதிகாரிகளுடன் கலந்தாலோசித்தார்.
சிறை வளாக ஆய்வை முடித்துக் கொண்டு திரும்பும் வழியில், புழல் காவல் நிலையத்திற்கும் முதலமைச்சர் திடீரெனச் சென்று ஆய்வு நடத்தினார். காவல் நிலையத்திற்குள் நுழைந்த அவர், அங்கு பணியில் இருந்த ஆய்வாளர் வசந்த் ராஜாவைத் தனது இருக்கையிலேயே அமர்ந்திருக்கச் சொல்லிவிட்டு, பொதுமக்கள் அமரும் இடத்தில் அமர்ந்து உரையாடினார். பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள், கணினி அறை செயல்பாடுகள் மற்றும் கைதிகள் அடைக்கப்படும் அறைகளைப் பார்வையிட்ட அவர், புகார்கள் மீது தேவையற்ற தாமதமின்றி உடனுக்குடன் உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.
முதலமைச்சரின் இந்த அதிரடி வருகையை அறிந்ததும், புழல் சிறை மற்றும் காவல் நிலையத்தின் வெளியே ஏராளமான பொதுமக்கள் திரண்டு உற்சாக முழக்கங்களை எழுப்பினர். பொதுமக்களை நோக்கிப் புன்னகையுடன் கையசைத்தபடி சென்ற முதலமைச்சரின் இந்த ஆய்வுகள், நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையையும் வேகத்தையும் அதிகரிக்கும் என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.