காவிரி நதிநீர் விவகாரத்தில் தமிழகத்திற்கு உரிய விகிதாச்சார அளவிலான பற்றாக்குறை நீரான 17.604 டிஎம்சி தண்ணீரை கர்நாடக அரசு உடனடியாகத் திறந்துவிடுவதை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கூடுதல் நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தர்வுகளைக் கூட கர்நாடகா அமல்படுத்துவதில்லை என்றும், இதன் காரணமாகக் காவிரி டெல்டா விவசாயிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதாகவும் அந்த அறிக்கையில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
முன்னதாகக் காவிரி ஆற்றில் இருந்து போதிய தண்ணீரைத் திறந்துவிடக் கோரி தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம், இந்த விவகாரத்தில் விரிவான நிலை அறிக்கையைத் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டிருந்தது. அதனடிப்படையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கையில், பற்றாக்குறையை ஈடுகட்ட நாளொன்றுக்கு 22,000 கன அடி வீதம் 15 நாட்களுக்குத் தண்ணீர் திறக்க ஆணையத்தில் வலியுறுத்தப்பட்ட போதிலும், வெறும் 9,000 கன அடி மட்டுமே திறக்க ஆணையம் உத்தரவிட்டதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், காவிரி நீர் மேலாண்மை ஆணையம் பிறப்பித்த அந்த 9,000 கன அடி நீர் திறப்பு உத்தரவைக் கூட கர்நாடக அரசு மதிக்கவில்லை எனத் தமிழ்நாடு அரசு தங்களது நிலை அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. கர்நாடக அணைகளில் போதிய நீர் இருப்பு இருந்தபோதிலும், வறட்சிக் கால விகிதாச்சார விதிகளின்படி தமிழகத்திற்கு நீர் ஒதுக்காமல் பாசனக் கால்வாய்கள் மற்றும் தடுப்பணைகள் மூலம் சுமார் 20 டிஎம்சி காவிரி நீரை கர்நாடகா சட்டவிரோதமாக மடைமாற்றம் செய்து எடுத்துள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜூன் மாதம் முதல் தற்போது வரை தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நீரின் அளவு கிடைக்காததால் குறுவை சாகுபடி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், தமிழகத்திற்கு வழங்க வேண்டிய பற்றாக்குறை நீரான 17.604 டிஎம்சி தண்ணீரை உடனடியாகத் திறந்துவிட உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது. இந்த வழக்கு வரும் வாரம் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ள நிலையில், தமிழ்நாடு அரசின் இந்த உறுதியான நிலைப்பாடு காவிரி நீர் விவகாரத்தில் மிக முக்கியத் திருப்பமாகப் பார்க்கப்படுகிறது.