Posted in

லண்டனில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற ஐங்கரன் விக்னேஸ்வரனின் நூல் வெளியீட்டு விழா!

லண்டன் கிரீன்ஃபோர்ட் (Greenford) நகரில், ஈழத்து இலக்கிய உலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் எழுத்தாளர் ஐங்கரன் விக்னேஸ்வரன் அவர்களின் நூல்கள் வெளியீட்டு விழா மிகச் சிறப்பாகவும் உணர்வுபூர்வமாகவும் நடைபெற்றது. கனடாவில் வசித்து வரும் இவர், ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டம், இனப்படுகொலை வரலாறு மற்றும் அரசியல் அதிகாரப் பகிர்வு குறித்து பல முக்கிய நூல்களை எழுதியுள்ளார். யாழ்ப்பாணம் பரி யோவான் கல்லூரியில் (St. John’s College) தனது ஆரம்பக் கல்வியைக் பயின்ற இவர், ஈழத் தமிழர்களின் வரலாற்றுக் காயங்களையும் உரிமைகளையும் உலக அரங்கிற்கு எழுத்து வடிவில் கொண்டு செல்லும் முக்கிய ஆளுமையாகத் திகழ்கிறார்.

கனடாவிலிருந்து பிரத்யேகமாக வருகை தந்திருந்த ஐங்கரன் விக்னேஸ்வரன் எழுதிய புத்தகங்களின் வெளியீட்டு நிகழ்வில், லண்டனின் பல பகுதிகளிலிருந்தும் எழுத்தாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள் மற்றும் தமிழ் மக்கள் திரளாகப் கலந்துகொண்டனர். ஈழ மண்ணின் தியாகங்களையும், தமிழர்களின் அரசியல் எதிர்காலம் குறித்த ஆழமான சிந்தனைகளையும் இந்நூல்கள் தாங்கி நிற்பதாக விழாவில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர். குறிப்பாக, முப்பதாண்டு கால ஈழப் போராட்டத்தின் யதார்த்தங்களை இளைய தலைமுறைக்குக் கடத்தும் பாலமாக இந்நூல்கள் அமையும் என்று பேச்சாளர்கள் குறிப்பிrட்டனர்.

விழாவில் உரையாற்றியவர்கள், ஈழத் தமிழர்களின் மீதான திட்டமிட்ட இனப்படுகொலை மற்றும் அரசியல் ஒடுக்குமுறைகளை ஆவணப்படுத்துவதில் ஐங்கரன் விக்னேஸ்வரன் போன்றவர்களின் படைப்புகள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை எனக் பாராட்டினர். வெறும் வரலாற்று நிகழ்வுகளை மட்டும் கூறாமல், நிரந்தரத் தீர்வாகத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமை மற்றும் அதிகாரப் பகிர்வு எத்தகையது என்பதைப் பற்றியும் இந்நூல்கள் விரிவாகப் பேசுகின்றன.

நிகழ்ச்சியின் நிறைவில் எழுத்தாளர் ஐங்கரன் விக்னேஸ்வரன் ஏற்புரை வழங்குகையில், தமிழர்களின் வரலாற்றை எதிர்காலச் சந்ததியினர் மறக்காமல் இருக்க எழுத்துலகப் போராட்டம் தொடர்ந்து வீரியத்துடன் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றார். இந்த நூல் வெளியீட்டு விழா, லண்டன் வாழ் ஈழத் தமிழர்கள் மத்தியில் எழுச்சிமிக்க ஒரு இலக்கிய சந்திப்பாகவும், இனத்தின் குரலை உலகிற்கு ஓங்கி உரைக்கும் நிகழ்வாகவும் அமைந்தது.