Posted in

ராகுல் காந்திதான் எங்கள் பிரதமர் வேட்பாளர்: தவெகவினரின் பிரசாரத்திற்கு அமைச்சர் ராஜேஷ்குமார் அதிரடி பதிலடி!

வரவிருக்கும் 2029-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் ராகுல் காந்திதான் தேசிய அளவில் பிரதமர் வேட்பாளர் என்பதில் காங்கிரஸ் கட்சிக்கு எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை எனத் தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். கூட்டணித் தலைவரான விஜய்யை தவெகவினர் ‘எதிர்காலப் பிரதமர்’ என முன்னிறுத்தி பிரசாரம் செய்து வரும் வேளையில், அமைச்சரின் இந்தப் பேச்சு அரசியல் வட்டாரத்தில் புதிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
காங்கிரஸ் கட்சி 140 ஆண்டுகாலப் பாரம்பரியமிக்க பழமையான ஒரு தேசிய இயக்கம் என்று சுட்டிக்காட்டிய அமைச்சர் ராஜேஷ்குமார், எங்களைப் பொறுத்தவரை இந்திய நாட்டின் முகமாக ராகுல் காந்தியே திகழ்கிறார் என்றார். “யார் வேண்டுமானாலும் தங்களுக்கு விருப்பமான தலைவர்களைப் பற்றி கருத்துச் சொல்லலாம்; ஆனால், இந்திய மக்கள் அணைவரையும் ஒன்றிணைக்கும் தலைவரான ராகுல் காந்தி நிச்சயம் 2029-ல் பிரதமர் நாற்காலியில் அமர்வார்” என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
சமீபகாலமாகத் தவெக நிர்வாகிகள் சிலர் ‘இன்றைய முதல்வர் விஜய், நாளைய பிரதமர்’ என்ற வாசகங்களுடன் போஸ்டர்களை ஒட்டி வருவதுடன், தமிழ்நாட்டைச் சேர்ந்தவரே அடுத்த பிரதமராக வர வேண்டும் என்ற கருத்துக்களையும் முன்வைத்து வருகின்றனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாகவே, ராகுல் காந்தியின் தலைமையை தேசிய அளவில் யாரும் கேள்வி கேட்க முடியாது என்ற வகையில் காங்கிரஸ் தரப்பிலிருந்து இந்த அழுத்தமான விளக்கம் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் தவெக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் இணைந்து செயல்பட்டு வந்த போதிலும், தேசிய அளவிலான பிரதமர் வேட்பாளர் விவகாரத்தில் தங்களுடைய நிலைப்பாட்டில் எவ்வித சமரசமும் இல்லை என்பதை அமைச்சர் ராஜேஷ்குமார் தெளிவுபடுத்தியுள்ளார். அதேவேளையில், தற்போதைய சூழலில் மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் மக்கள் நலத் திட்டங்களிலேயே இரு கட்சிகளும் கவனம் செலுத்தி வருவதாகக் கூறி விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முயன்றுள்ளார்.