செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அருகே சுடுகாட்டுப் பகுதியில் ‘A’ பிரிவு பிரபல ரவுடி ஒருவர் மர்மக் கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. கேளம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சாகுல் அமீது (24) என்ற அந்த ரவுடி, கொலை உள்ளிட்ட 12-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகளில் தொடர்புடையவர் என்றும், சமீபத்தில்தான் கஞ்சா வழக்கிலிருந்து ஜாமீனில் சிறையிலிருந்து வெளியே வந்தார் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போலீசாரின் விசாரணையில், கேளம்பாக்கம் பகுதியில் யார் பெரிய ஆள் என்று இன்ஸ்டாகிராமில் பதிவு போடுவது தொடர்பாக சாகுல் அமீதுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த எதிர்த்தரப்பு ரவுடிகளான அப்துல், அருண் மற்றும் கொளத்தூர் ஜெய் ஆகியோருக்கும் இடையே நீண்டநாட்களாகக் கடும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சாகுல் அமீதை அந்த ரவுடி கும்பல் கத்தியால் வெட்டிய நிலையில், அதில் பிழைத்துக் கொண்ட அவரை ஆகஸ்ட் 26-ஆம் தேதி பிறந்தநாளில் போட்டுத்தள்ளப் போவதாக எதிரிகள் சபதம் எடுத்திருந்ததாகக் கூறப்படுகிறது.
பிறந்தநாளன்று சாகுல் அமீது சிறையில் இருந்ததால் தப்பிய நிலையில், ஆகஸ்ட் 28-ஆம் தேதி சிறையிலிருந்து வெளியே வந்த அவரை எதிரிக் கும்பல் தீவிரமாகக் கண்காணித்து வந்துள்ளது. இந்நிலையில், கேளம்பாக்கம் மயானப் பகுதியில் சாகுல் அமீது தனது கூட்டாளிகளுடன் மது அருந்திக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த மர்மக் கும்பல் அவரைச் சூழ்ந்துகொண்டு சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்துவிட்டுத் தப்பியோடியுள்ளது.
சம்பவம் குறித்துத் தகவலறிந்த கேளம்பாக்கம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, ரத்த வெள்ளத்தில் மிதந்த சாகுல் அமீதின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இக்கொலை சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், பழிக்குப்பழியாக இக்கொலையை அரங்கேற்றிய தலைமறைவான எதிரிக் கும்பலைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.