Posted in

சட்டப்பேரவை நேரலையைக் கட்டுப்படுத்தும் தவெக அரசு – எடப்பாடி பழனிசாமி சரமாரி குற்றச்சாட்டு!

தமிழ்நாடு சட்டப்பேரவை விவாதங்களின் நேரலை ஒளிபரப்பில் எதிர்க்கட்சிகளின் உரைகள் திட்டமிட்டு இருட்டடிப்பு செய்யப்படுவதாகவும், பேரவை நேரலை முற்றிலும் தவெக அரசின் முழுக் கட்டுப்பாட்டில் இயங்கி வருவதாகவும் அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார். பேரவை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கேள்விகளும் மக்கள் நலப் பேச்சுகளும் முழுமையாக நேரலையில் காட்டப்படுவதில்லை எனக் கண்டித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “சட்டப்பேரவையில் ஆளுங்கட்சி அமைச்சர்களும் முதல்வரும் பேசுவதை மட்டுமே முழுமையாக ஒளிபரப்புகிறார்கள். ஆனால் மக்கள் பிரச்சனைகள் குறித்தும், அரசின் திட்டங்களில் உள்ள குறைபாடுகள் குறித்தும் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பும்போது, கேமரா கோணங்கள் மாற்றப்படுகின்றன அல்லது ஒலி துண்டிக்கப்படுகிறது. நாங்கள் பேசுவது மக்களுக்குச் சென்று சேரக் கூடாது என்பதில் அரசு மிகக் கவனமாக இருக்கிறது” எனக் காட்டமாகக் குறிப்பிட்டார்.
சட்டப்பேரவை நிகழ்வுகளை முழுமையாக நேரலை செய்வோம் என வாக்குறுதி அளித்துவிட்டு, நடைமுறையில் எதிர்க்கட்சிகளின் ஜனநாயக உரிமையைப் பறிக்கும் வகையிலான நடவடிக்கைகளில் தவெக அரசு ஈடுபடுவது வேதனையளிப்பதாக அவர் சுட்டிக்காட்டினார். அனைத்து உறுப்பினர்களின் உரைகளும் தடங்கலின்றி மக்களுக்குக் காட்டும் வகையில் பேரவை ஒளிபரப்பு சுயேச்சையாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
எதிர்க்கட்சிகளின் சுட்டிக்காட்டல்களை ஏற்க மனமின்றி, நேரலையைக் கட்டுப்படுத்துவதன் மூலம் தங்களின் தோல்விகளை மறைக்க அரசு முயல்வதாக விமர்சித்த எடப்பாடி பழனிசாமி, இந்த ஜனநாய அத்துமீறலுக்கு எதிராக அதிமுக பேரவையிலும் மக்கள் மன்றத்திலும் தொடர் போராட்டங்களை முன்னெடுக்கும் என எச்சரித்தார். எடப்பாடி பழனிசாமியின் இந்த குற்றச்சாட்டு தமிழக அரசியல் வட்டாரத்திலும் சட்டப்பேரவை வளாகத்திலும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.