Posted in

மண்ணில் புதைக்கப்பட்ட 2,000 உள்ளாடைகள்: ஸ்விட்சர்லாந்து விஞ்ஞானிகள் நடத்திய விசித்திர ஆய்வில் வெளியான உண்மை!

நிலத்தின் ஆரோக்கியம் மற்றும் மண்ணில் வாழும் நுண்ணுயிரிகளின் செயல்பாட்டைக் கண்டறிவதற்காக, ஸ்விட்சர்லாந்தில் சுமார் 2,000 பருத்தி (Cotton) உள்ளாடைகளை மண்ணுக்குள் புதைத்து நடத்தப்பட்ட விசித்திரமான அறிவியல் ஆராய்ச்சியின் முடிவுகள் தற்பொழுது வெளியாகி சர்வதேச அளவில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளன. ஜூரிச் பல்கலைக்கழகம் (University of Zurich) மற்றும் அக்ரோஸ்கோப் (Agroscope) ஆய்வு மையம் இணைந்து ‘Proof by Underpants’ என்ற பெயரில் இந்த விசித்திர ஆய்வை மேற்கொண்டன.
சுமார் 1,000 தன்னார்வலர்களின் உதவியோடு ஸ்விட்சர்லாந்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள தோட்டம், புல்வெளி மற்றும் விவசாய நிலங்களில் 2,000 பருத்தி உள்ளாடைகளும் 12,000 டீ பேக்குகளும் மண்ணில் புதைக்கப்பட்டன. இரண்டு மாதங்களுக்குப் பிறகு அவை தோண்டி எடுக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டபோது, சில நிலங்களில் புதைக்கப்பட்ட உள்ளாடைகள் முழுமையாக மக்கி துளைகளுடன் சல்லடையாக மாறியிருந்தன; ஆனால் சில இடங்களில் புதைக்கப்பட்ட துணிகள் எவ்வித மாற்றமும் இன்றி அப்படியே இருந்தன.
மண்ணில் உள்ள புழுக்கள், பூஞ்சைகள் மற்றும் பாக்டீரியாக்கள் போன்ற நுண்ணுயிரிகள் பருத்தியில் உள்ள செல்லுலோஸை (Cellulose) உணவாக உட்கொள்வதால், உள்ளாடைகள் வேகமாக மக்கிப் போகின்றன. தனியார் தோட்டங்களில் புதைக்கப்பட்ட உள்ளாடைகள் மிக வேகமாக (சுமார் 58%) மக்கிப்போயிருந்தன; ஆனால் வீடுகளுக்கு வெளியே பராமரிக்கப்படும் புல்வெளிகளில் (Lawns) நுண்ணுயிரிகளின் செயல்பாடு மிகக் குறைவாக (40%) இருந்தது ஆய்வில் தெரியவந்தது. நிலத்தை நாம் எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதே மண்ணின் வளத்தையும் நுண்ணுயிரிகளின் உயிரோட்டத்தையும் தீர்மானிக்கிறது என்பதை இது நிரூபித்துள்ளது.
மனிதகுலத்தின் உணவு உற்பத்திக்கு அடிப்படையான மண் வளம் தொடர்ந்து குறைந்து வருவதை மக்களுக்கு எளிய முறையில் உணர்த்துவதற்காகவே இந்த ‘உள்ளாடை குறியீடு’ (Underwear Index) சோதனை நடத்தப்பட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ‘பிளான்ட்ஸ், பீப்பிள், பிளானட்’ (Plants, People, Planet) என்ற சர்வதேச அறிவியல் இதழில் வெளியாகியுள்ள இந்த ஆய்வு, மண் வளத்தைப் பாதுகாப்பதன் அவசியத்தை உலகிற்கு விசித்திரமான முறையில் உணர்த்தியுள்ளது.