இந்தோனேசியாவின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான பாலி தீவின் செமினியாக் (Seminyak) பகுதியில் அமைந்துள்ள ‘சே கடோ கடோ’ (Chez Gado Gado) என்ற உணவகத்தில் நடைபெற்ற பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது, பலூன்கள் திடீரென வெடித்துச் சிதறிப் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாகச் சுற்றுலாப் பயணிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற இந்த உணவகத்தில் ஏற்பட்டத் தீ விபத்தால், அங்கு அமைக்கப்பட்டிருந்த ஓலைக்கூரை முழுவதும் தீப்பற்றி எரிந்து சேதமடைந்தது.
உணவகத்தில் வைக்கப்பட்டிருந்த பிறந்தநாள் மெழுகுவர்த்தி அல்லது தீப்பொறிக் குச்சியின் (Sparklers) வெப்பம், எளிதில் தீப்பற்றக்கூடிய வாயு நிரப்பப்பட்டிருந்த பலூன்களில் பட்டதால் இந்த விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. பலூன்கள் பயங்கர சத்தத்துடன் வெடித்து மிகப்பெரிய தீப்பிழம்பாக மாறிய அடுத்த 30 வினாடிகளுக்குள், தீ உணவகம் முழுவதும் அதிவேகமாகப் பரவியது.
தீ விபத்து ஏற்பட்ட தருணத்தில் உணவகத்தில் ஏராளமான வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் இரவு உணவருந்திக் கொண்டிருந்தனர். பலூன்கள் வெடித்த சத்தத்தைக் கேட்டு வெடிகுண்டுத் தாக்குதல் என அஞ்சிய சுற்றுலாப் பயணிகள், அலறியடித்துக் கொண்டு உணவகத்தின் பின்வாசல் வழியாக வெளியேறித் தப்பினர். உணவக ஊழியர்கள் தீயணைப்புக் கருவிகளைக் கொண்டு தீயைக் கட்டுப்படுத்த முயன்ற போதிலும், அது பலனளிக்கவில்லை.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள், சுமார் இரண்டரை மணிநேரம் போராடித் தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தன. நல்வாய்ப்பாக இந்த விபத்தில் எவருக்கும் உயிரிழப்போ அல்லது பலத்த காயங்களோ ஏற்படவில்லை என்றாலும், சுமார் 2.87 லட்சம் சிங்கப்பூர் டாலர் மதிப்பில் சொத்துக்கள் சேதமடைந்துள்ளதாகக் காவல்துறைத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.