அமெரிக்க ராணுவத்தால் கைது செய்யப்பட்டு நியூயார்க் சிறையில் அடைக்கப்பட்டுள்ள வெனிசுலாவின் முன்னாள் அதிபர் நிக்கோலஸ் மதுரோ (Nicolás Maduro), சிறைச்சாலையிலிருந்து தங்களின் ஆதரவாளர்களுக்கு ‘சமாதானச் சின்னத்தைக்’ (Peace Sign) காட்டும் புகைப்படங்களை வெளியிட்டு உலக அளவில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளார். சாம்பல் நிற விளையாட்டு ஆடையில் (Gray Tracksuit) புன்னகையுடன் காட்சியளிக்கும் அவரது இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தீவிரமாகப் பகிரப்பட்டு வருகின்றன.
அமெரிக்காவின் போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு, புரூக்ளின் சிறைச்சாலையில் (MDC Brooklyn) அடைக்கப்பட்டுள்ள 63 வயதான மதுரோ, தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தின் வாயிலாக இப் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். “எங்கள் மீது அன்பு செலுத்தும் அனைத்து மக்களுக்கும், குழந்தைகளுக்கும் இந்தச் சிறிய அன்பளிப்பை அனுப்புகிறேன்; நாங்கள் உறுதியாகவும் நம்பிக்கையுடனும் இருக்கிறோம்” என்ற செய்தியையும் அத்துடன் அவர் பதிவிட்டுள்ளார்.
போதைப்பொருள் பயங்கரவாதம் மற்றும் சர்வதேசக் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களின் வழக்கு விசாரணை வரும் 2027-ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெறவுள்ளது. சிறைச்சாலையில் கணிசமாக எடையைக் குறைத்துக் காணப்படும் மதுரோ, அமெரிக்கப் படைகளால் கைது செய்யப்பட்டுப் பதவியிழந்த பின்னரும், ஆதரவாளர்களை உற்சாகப்படுத்தும் வகையில் சிறையிலிருந்து இச்செய்தியை அனுப்பியுள்ளார்.
அமெரிக்கா மற்றும் வெனிசுலாவின் தற்காலிக அரசுக்கு இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க எண்ணெய் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ள சூழலில், மதுரோ சிறையிலிருந்து இந்த அமைதிச் சின்னப் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது சர்வதேச அரசியல் வட்டாரத்தில் புதிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது.