மத்திய கிழக்கில் ஜோர்டானில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களைக் குறிவைத்து ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியதற்குப் பதிலடியாக, “நாங்கள் ஈரானை மிகவும் கொடூரமாகத் தாக்குவோம்; நிச்சயமாக இதற்கான பதிலடி இருக்கும்” என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார். சில வாரங்களாக நிலவி வந்த தற்காலிக அமைதிக்குப் பிறகு, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நேரடி ராணுவ மோதல்கள் மீண்டும் வெடித்துள்ளதால் சர்வதேச அளவில் பெரும் பதற்றம் உருவாகியுள்ளது.
முன்னதாக, ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) பகுதியில் உள்ள ஈரானின் லாரக் தீவில் (Larak Island) இருந்த ஏவுகணைத் தளங்கள் மீது அமெரிக்கப் படைகள் வான்வழித் தாக்குதல் நடத்தின. இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, ஜோர்டானில் இயங்கி வரும் கிங் ஹுசைன் மற்றும் அல்-அஸ்ரக் ஆகிய அமெரிக்க ராணுவப் விமானத் தளங்களைக் குறிவைத்து ஈரானியப் புரட்சிகரக் காவல் படை (IRGC) பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசித் தாக்குதல் நடத்தியதாக ஈரான் அறிவித்தது.
ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் இதுகுறித்துச் சுட்டிக்காட்டிய அதிபர் டிரம்ப், ஈரான் வீசிய பெரும்பாலான ஏவுகணைகள் அமெரிக்க வான் பாதுகாப்பு அமைப்புகளால் வெற்றிகரமாக இடைமறித்து அழிக்கப்பட்டு விட்டன என்றும், எவ்வித பெரிய சேதமும் ஏற்படவில்லை என்றும் தெரிவித்தார். இருப்பினும், அமெரிக்கப் படைகளை அச்சுறுத்த முயன்ற ஈரானிய ராணுவத்தின் இந்த நடவடிக்கை பொறுத்துக் கொள்ளப்படாது என்றும், அதற்கு இணையான கடுமையான தாக்குதல் மூலம் பதிலடி கொடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் தீவிரமடைந்துள்ள இந்த ராணுவ மோதலால், உலகளாவிய கச்சா எண்ணெய் வர்த்தகம் மற்றும் கப்பல் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவின் புதிய பொருளாதாரத் தடைகள் மற்றும் தொடர் ராணுவ நடவடிக்கைகளுக்கு மத்தியிலும், ஈரான் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருவதால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர்ச் சூழல் மேலும் தீவிரமடைந்து உலக நாடுகளைக் கவலையில் ஆழ்த்தியுள்ளது.