தமிழ்நாடு அரசின் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை சார்பாகக் கள்ளச்சாராய ஒழிப்பு, மனம் திருந்தியவர்களுக்கான மறுவாழ்வுத் திட்டங்கள் மற்றும் துறை ரீதியான செயல்பாடுகளை நவீனப்படுத்துவது குறித்த புதிய அறிவிப்புகளும் நிதி ஒதுக்கீடுகளும் சட்டப்பேரவையில் வெளியிடப்பட்டுள்ளன. கள்ளச்சாராயம் காய்ச்சுதல் மற்றும் சட்டவிரோத மது விற்பனையிலிருந்து விலகி மனம் திருந்தி வாழ விரும்பும் நபர்களுக்கான நிதியுதவித் தொகை ரூ.50,000-லிருந்து ரூ.1 லட்சமாக உயர்த்தப்பட்டு, அதற்காக ரூ.10 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மதுவிலக்கு அமலாக்கப் பிரிவின் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்தும் நோக்கில், புதிய நவீன வாகனங்கள் மற்றும் அதிநவீனக் கண்காணிப்புக் கருவிகள் கொள்முதல் செய்வதற்காக ரூ.2.58 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், துறையின் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மையையும் வேகத்தையும் அதிகரிக்கும் வகையில் ‘E-KALAAL’ இணையதளம் முழுமையாக மேம்படுத்தப்பட உள்ளது. உரிமங்கள் வழங்கல், ரத்து செய்தல் மற்றும் பெயர் மாற்ற நடைமுறைகளை ஆன்லைன் மூலமாக மட்டுமே மேற்கொள்ளும் இந்த டிஜிட்டல் திட்டத்திற்காக ரூ.1.69 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இளைஞர்கள் மற்றும் பொதுமக்களிடையே போதைப்பொருள் தடுப்பு மற்றும் மதுபோதையில் வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் பேராபத்துகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப் பிரச்சார நிதி ரூ.5 கோடியிலிருந்து ரூ.10 கோடியாக இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இளைய தலைமுறையினரைக் கவரும் வகையில் சமூக ஊடகங்கள் (Social Media) வாயிலாக விழிப்புணர்வுப் பிரச்சாரங்களை முன்னெடுக்கப் பிரத்யேகமாக ரூ.2 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
தொழிற்சாலைகளுக்குப் பயன்படுத்தப்படும் நச்சுப் பொருளான மெத்தனால் (Methanol) சட்டவிரோதமாகக் கள்ளச்சாராயத் தயாரிப்பிற்குத் திசைதிருப்பப்படுவதைத் தடுக்க, கடுமையான விதிமுறைகளுடன் கூடிய ‘புதிய மெத்தனால் பயன்பாட்டுக் கொள்கை’ (New Methanol Usage Policy) விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கள்ளச்சாராயமற்ற மாநிலத்தை உருவாக்குவதை முதன்மை இலக்காகக் கொண்டு அறிவிக்கப்பட்டுள்ள இந்த நவீனத் திட்டங்கள் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.