Posted in

சிறுவர்கள் 43 பேர் பலி: பாரம்பரிய விருத்தசேதனச் சடங்கு தென் ஆப்பிரிக்காவில் மீண்டும் சோகமாக மாறியது

தென் ஆப்பிரிக்காவில் பழங்குடியின சிறுவர்கள் சிறுவர் பருவத்திலிருந்து பருவ வயதை எட்டியதைக் குறிக்கும் ‘உல்வாலுகோ’ (Ulwaluko) என்ற பாரம்பரியக் சுன்னத் (Circumcision) சடங்கின் போது, முறையற்ற முறையில் நடத்தப்பட்ட அறுவை சிகிச்சைகளால் 43 பதின்ம வயது சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 75-க்கும் மேற்பட்ட சிறுவர்கள் படுகாயமடைந்து அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் ஆண்டுதோறும் குளிர்காலம் மற்றும் கோடைக்காலத்தில் பழங்குடியின சிறுவர்கள் மலைப்பகுதிகளில் உள்ள சிறப்பு முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுப் பாரம்பரியக் கல்வி மற்றும் சுன்னத் செய்யும் சடங்குகள் நடத்தப்படுவது வழக்கம். இருப்பினும், சட்டவிரோதமாகச் செயல்படும் போலிப் பயிற்சிப் பள்ளிகள் மற்றும் தகுதியற்ற நபரால் கத்தரிக்கோல், பழைய பிளேடுகள் மற்றும் கூர்மையான ஆயுதங்களைக் கொண்டு பாதுகாப்பற்ற முறையில் சுன்னத் செய்யப்படுவதே இந்த உயிரிழப்புகளுக்கு முக்கியக் காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
முறையான மருத்துவ வசதிகள் இல்லாத சூழலில் மேற்கொள்ளப்பட்ட இந்தச் சடங்குகளால் சிறுவர்களுக்குக் கடுமையான இரத்தப்போக்கு, காயம் சீழ்பிடித்தல் (Sepsis), கேங்க்ரீன் பாதிப்பு மற்றும் நீரிழப்பு ஏற்பட்டு உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன. இந்த ஆண்டில் அதிகபட்சமாகம்புமலங்கா (Mpumalanga) மாகாணத்தில் 18 சிறுவர்களும், கிழக்கு கேப் மாகாணத்தில் 14 சிறுவர்களும் உயிரிழந்துள்ளதாக அரசு அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து தீவிர அதிரடி நடவடிக்கையில் இறங்கிய தென் ஆப்பிரிக்கக் காவல்துறை மற்றும் பாரம்பரிய விவகாரங்கள் துறை, சட்டவிரோதமாகச் செயல்பட்ட 58 போலிப் பயிற்சிப் முகாம்களைப் பூட்டி சீல் வைத்ததுடன், 40 போலி மருத்துவப் பயிற்சியாளர்களைக் கைது செய்துள்ளது. பாரம்பரியம் என்ற பெயரில் அப்பாவிச் சிறுவர்களின் உயிரைப் பறிக்கும் இத்தகைய சட்டவிரோத முகாம்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கைகள் தொடரும் என தென் ஆப்பிரிக்க அரசு எச்சரித்துள்ளது.