Posted in

இந்திய பிரதமர் மோடியின் பேச்சால் தர்மசங்கடத்திற்கு உள்ளன புட்டின்..

கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கேக்கில் நடைபெற்று வரும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சி மாநாட்டின் இடையே, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினைச் சந்தித்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, “உலகம் இப்போது முடிவில்லாத போரிலிருந்து (Endless War) விலகி, போரின் முடிவை (End of War) நோக்கிய பாதையில் பயணிக்க வேண்டும்” என நேரடியாக வலியுறுத்தியுள்ளார்.
இரு தலைவர்களும் பங்கேற்ற இருதரப்பு பேச்சுவார்த்தையின் போது, உக்ரைன் மோதல் குறித்துக் கவலை தெரிவித்த பிரதமர் மோடி, “போரில் கழிக்கும் ஒவ்வொரு நாளும் மனிதகுலத்தைப் பின்னடைவுக்கே அழைத்துச் செல்கிறது. ஆனால் அமைதியை நோக்கி வைக்கும் ஒவ்வொரு அடியும் மனித குலத்திற்கு புதிய நம்பிக்கையையும் உற்சாகத்தையும் தருகிறது” என்று கூறினார். மேலும் காந்தி மற்றும் புத்தர் பிறந்த மண்ணிலிருந்து ஒரே ஒரு செய்திதான் உலகிற்கு வழங்கப்படுகிறது, அது ‘அமைதியின் பாதை’ மட்டுமே என்றும் அவர் புடினிடம் சுட்டிக்காட்டினார்.
முன்னதாக 2022-ஆம் ஆண்டு “இது போருக்கான யுகம் அல்ல” என்று புடினிடம் கூறியிருந்த மோடி, தற்போது 4 ஆண்டுகளைக் கடந்து நீடித்து வரும் உக்ரைன் போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர பேச்சுவார்த்தை மற்றும் இராஜதந்திர வழிகளே ஒரே தீர்வு என்பதை மீண்டும் நினைவூட்டியுள்ளார். மோடியின் இந்தத் தீர்க்கமான பேச்சைக் கேட்ட அதிபர் புடின், ரஷ்யா-இந்தியா இடையிலான சிறப்புமிக்க மூலோபாய நட்புறவை பாராட்டியதுடன், வரவிருக்கும் பிரிக்ஸ் (BRICS) உச்சி மாநாட்டிற்காக இந்தியா வரவுள்ளதையும் உறுதிப்படுத்தினார்.
இந்தப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு, இரு தலைவர்களும் ஒரே காரில் பயணித்து உலக நாடோடி விளையாட்டுப் போட்டியின் (World Nomad Games) தொடக்க விழாவில் பங்கேற்றனர். உக்ரைன்-ரஷ்யா போரினால் சர்வதேச அளவில் பொருளாதாரம் மற்றும் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், புடினை நேரில் சந்தித்து பிரதமர் மோடி வழங்கியுள்ள இந்த அமைதிச் செய்தி உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.