ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) பகுதியில் சர்வதேசக் கப்பல் போக்குவரத்திற்கு ஈரான் அச்சுறுத்தல் ஏற்படுத்தியதாகக் கூறி, அந்நாட்டின் புரட்சிகரக் காவல் படைக்கு (IRGC) சொந்தமான ராணுவ இலக்குகள் மீது அமெரிக்க ராணுவம் அதிரடித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. அமெரிக்காவின் மத்திய கட்டளை அலுவலகம் (US CENTCOM) இந்தத் தாக்குதலை உறுதிசெய்துள்ள நிலையில், தெற்கு ஈரானின் பண்டார் அப்பாஸ் (Bandar Abbas) மற்றும் கெஷ்ம் தீவு (Qeshm Island) அருகே தொடர் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்துள்ளதாக ஈரான் அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஹோர்முஸ் நீரிணை கடல் வழியில் வர்த்தகக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தவும், கடல் கண்ணிவெடிகளை (Sea mines) விதைக்கவும் ஈரான் முயற்சிப்பதாகக் குற்றம்சாட்டி, அமெரிக்கா இந்தத் திட்டமிட்ட தாக்குதல்களை முன்னெடுத்துள்ளது. பண்டார் அப்பாஸ் நகரின் கிழக்கே கேட்ட வெடிச்சத்தங்களைத் தொடர்ந்து, அப்பகுதியில் பெரும் புகைமூட்டம் சூழ்ந்தது. இருப்பினும், தெற்கு ஹோர்மோஸ்கான் மாகாணத்தில் இதுவரைப் பெரிய அளவில் உயிர்ச்சேதமோ அல்லது உள்கட்டமைப்பு பாதிப்போ பதிவாகவில்லை என்று ஈரானிய ஊடகங்கள் ஆரம்பக் கட்டத்தில் தெரிவித்துள்ளன.
இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து ஈரானுக்குக் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், “நியாயமான இந்தத் தாக்குதலுக்கு எதிராக ஈரான் ஏதேனும் பதிலடி கொடுக்க முயன்றால், இதுவரை இல்லாத அளவிற்கு மிகக் கடுமையான தாக்குதலைச் சந்திக்க நேரிடும்” எனத் தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் பதிவிட்டுள்ளார். முன்னதாக, லாரக் தீவில் (Larak Island) அமெரிக்கா நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாக மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களைக் குறிவைத்து ஈரான் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விநியோகத்தில் மிக முக்கியப் பங்கு வகிக்கும் ஹோர்முஸ் நீரிணை பகுதியில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மீண்டும் நேரடி மோதல் வெடித்துள்ளதால், உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்த்தப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நிலைமை மோசமடைந்து வரும் நிலையில், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் உலக நாடுகள் இந்த ராணுவ மோதலை உடனடியாகத் தடுத்து நிறுத்த தீவிர இராஜதந்திர முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன.