உலகின் மிக முக்கியமான சுற்றுலா மற்றும் வர்த்தக மையமான நியூயார்க் நகரின் ‘டைம்ஸ் ஸ்கொயர்’ (Times Square) பகுதியில், இரண்டு பெரிய சமையலறை கத்திகளுடன் கண்டபடி பொதுமக்களைக் குத்திச் சாய்த்த 49 வயது பெண்ணை நியூயார்க் நகரக் காவல்துறை (NYPD) துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தியது. இந்தத் திடீர் கத்திக்குத்துத் தாக்குதலில் 32 வயதுப் பெண் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், 68 வயது முதியவர் ஒருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கியூன்ஸ் பகுதியைச் சேர்ந்த பமீலா சிஸ்னெரோஸ் (Pamela Cisneros) என்ற அந்தப் பெண், செவந்த் அவென்யூ (Seventh Avenue) பகுதியில் சப்வே ரயில் நிலையத்திலிருந்து வெளியே வந்த முதியவரை முதலில் வயிற்றில் குத்தியுள்ளார். அதன்பின் அடுத்த 20 விநாடிகளுக்குள், வங்கி அதிகாரியான 32 வயதுப் பெண்ணையும் வயிற்றில் சரமாரியாகக் குத்தியுள்ளார். எவ்வித முன்விரோதமும் இன்றித் தற்செயலாக நடத்தப்பட்ட (Random and unprovoked attack) இந்த கொடூரத் தாக்குதலால் அப்பகுதியில் இருந்த ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் அலறியடித்து ஓடினர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், கத்திகளுடன் இருந்த அப்பெண்ணைச் சூழ்ந்துகொண்டு ஆயுதங்களைக் கீழே போடுமாறு சுமார் 4 நிமிடங்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் “நான் கத்தியைக் கீழே போடமாட்டேன், உங்களைக் கொன்றுவிடுவேன்” என்று கூறி அப்பெண் காவல்துறையினரை நோக்கிப் பாய்ந்துள்ளார். காவலர்கள் முதலில் ‘டேசர்’ (Taser) மின்சாரத் துப்பாக்கியைப் பயன்படுத்தி அவரைத் தடுக்க முயன்ற போதிலும், அது பலனளிக்காததால் தற்காப்புக்காகத் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
படுகாயமடைந்த தாக்குதல் நடத்திய பெண்ணும், பாதிக்கப்பட்ட இருவரும் பெல்லெவியூ மருத்துவமனைக்குக் (Bellevue Hospital) கொண்டு செல்லப்பட்ட நிலையில், தாக்குதல் நடத்திய பெண்ணும் 32 வயதுப் பெண்ணும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். தாக்குதல் நடத்திய பெண்ணுக்கு மனநலப் பிரச்சினைகள் இருந்ததாக நியூயார்க் காவல்துறை ஆணையர் ஜெசிகா டிஷ் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் குறித்துத் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாக மேயர் தெரிவித்துள்ளார்.