ஒட்டாவா: அமெரிக்கா மற்றும் கனடா இடையே கடந்த ஆகஸ்ட் 21 அன்று வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்ததைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், “அமெரிக்க அரசு இணையத்தில் மீம்ஸ்கள் போடுவதையும், மற்றவர்களைக் கிண்டல் செய்வதையும் நிறுத்திவிட்டு, வர்த்தகப் பேச்சுவார்த்தையை தீவிரமாக அணுக வேண்டும்” என கனடா பிரதமர் மார்க் கார்னி அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்திற்கு நேரடியாகப் பதிலடி கொடுத்துள்ளார்.
சமீபத்தில் கனடா பொருட்கள் மீது 50 சதவீத வரியை ட்ரம்ப் உயர்த்திய நிலையில், ஒன்டாரியோ ஏரியை ‘லேக் அமெரிக்கா’ என பெயர் மாற்றுவதாக அறிவித்ததும், கனடா இராணுவத்தைக் கேலி செய்து அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் சமூக வலைதளங்களில் பதிவிட்டதும் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இது குறித்து ஒட்டாவாவில் செய்தியாளர்களிடம் பேசிய கார்னி, “அமெரிக்க அதிகாரிகள் தங்களின் பதவிகளுக்குரிய மரியாதையை விட்டுவிட்டுச் செயல்படுகிறார்கள். முதிர்ச்சியற்ற இத்தகைய போக்குகள் இருநாட்டு வர்த்தகப் பேச்சுவார்த்தைக்கு எந்த வகையிலும் உதவாது” எனக் கடுமையாகச் சாடினார்.
கனடாவின் தொழில் அமைப்புகளையும், நாட்டின் இறையாண்மையையும் அடகு வைக்கும் வகையில் அமெரிக்கா விதிக்கும் நிபந்தனைகளை ஒருபோதும் ஏற்றுக்கூற முடியாது என மார்க் கார்னி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். கனடா தொழில் நிறுவனங்களை அமெரிக்க நிறுவனங்களின் கிளையாக மாற்றவும், கனடாவின் வாகன உற்பத்தியைக் கட்டுப்படுத்தவும் ட்ரம்ப் நிர்வாகம் முயல்வதாகக் குற்றம்சாட்டிய அவர், ஒரு சுயசார்புடைய நாடாகத் தன் நாட்டின் வர்த்தக உரிமைகளை விட்டுக்கொடுக்க மாட்டோம் என்றார்.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கைகளுக்குப் பதிலடியாக, சுமார் 20 பில்லியன் டாலர் மதிப்புள்ள அமெரிக்கப் பொருட்கள் மீது செப்டம்பர் 8 முதல் 15 முதல் 50 சதவீதம் வரை கூடுதல் வரி விதிக்கப்படும் என கனடா அரசு அறிவித்துள்ளது. இருப்பினும், பரஸ்பர மரியாதையுடனும், நிஜமான வர்த்தக நோக்கத்துடனும் அமெரிக்க பேச்சுவார்த்தைக்கு முன்வந்தால் மீண்டும் பேச்சுவார்த்தையைத் தொடங்கத் தயார் என்றும் கனடா பிரதமர் மார்க் கார்னி சுட்டிக்காட்டியுள்ளார்.