Posted in

ரூ.4,800 கோடி முதல் வழக்குகள் ரத்து வரை: சட்டப்பேரவையில் முதல்வர் விஜய்யின் மெகா 110 அறிவிப்புகள்

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் 110-வது விதியின் கீழ் உரையாற்றிய முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், மாநிலத்தின் நகர்ப்புற உள்கட்டமைப்பு மற்றும் நிர்வாக சீர்திருத்தங்களுக்காகப் பல்வேறு பிரம்மாண்ட புதிய திட்டங்களை அறிவித்தார். வடசென்னை, ஆவடி, பொன்னேரி மற்றும் மீஞ்சூர் பகுதிகளின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், மீஞ்சூரில் நாள் ஒன்றுக்கு 400 மில்லியன் லிட்டர் கடல்நீரை குடிநீராக்கும் அசுரத் திட்டம் ரூ.4,800 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் என முதலமைச்சர் அறிவித்தது அவையை அதிர வைத்தது.
மேலும், மதுரை மாநகராட்சியில் 40 ஆண்டுகள் பழமையான பாதாள சாக்கடை அமைப்பைச் சீரமைக்க முதற்கட்டமாக ரூ.2,400 கோடியும், ஆவடியில் 24 மணி நேரக் குடிநீர் திட்டத்திற்கு ரூ.500 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நகர்ப்புற சாலைகளை மேம்படுத்த ரூ.1,850 கோடியும், சென்னை, திருச்சி, திருப்பூர் மற்றும் புதுக்கோட்டையில் அதிநவீன பூங்காக்கள் அமைக்க ரூ.305 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளன. இதுமட்டுமன்றி, திருநெல்வேலி மற்றும் சேலம் மாநகராட்சிகளில் ரூ.547 கோடி செலவில் திடக்கழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் ‘வேஸ்ட் டு எனர்ஜி’ (Waste to Energy) திட்டங்களும் செயல்படுத்தப்பட உள்ளன.
அதேபோன்று, பொதுமக்களின் நீண்ட நாள் சிரமங்களைத் தவிர்க்கும் வகையில், ஓட்டுநர் உரிமம் (Digital Driving License) மற்றும் வாகனப் பதிவுச் சான்றிதழ்களை (Digital RC) பொதுமக்கள் இணைய வழியில் உடனடியாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளும் அதிநவீன டிஜிட்டல் சேவை 2026 செப்டம்பர் 15 முதல் நடைமுறைக்கு வரும் என முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். மேலும், தமிழ்நாட்டின் எந்தவொரு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திலும் விண்ணப்பிக்கும் ‘எனிவேர் ரெஜிஸ்ட்ரேஷன் & லைசென்சிங்’ (Anywhere Registration & Licensing) முறையும் கட்டம்பட அமல்படுத்தப்படவுள்ளது.
கூடுதலாக, கடந்த ஆட்சிக் காலங்களில் தங்களது நியாயமான உரிமைகளுக்காகவும் வாழ்வாதாரத்திற்காகவும் ஜனநாயக முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளையும் மனிதநேய அடிப்படையில் முழுமையாகத் திரும்பப் பெற அரசு முடிவு செய்துள்ளதாக அறிவித்தார். குறிப்பாகச் சிப்காட் எதிர்ப்புப் போராட்டம் மற்றும் பரந்தூர் விமான நிலைய எதிர்ப்புப் போராட்டங்களில் ஈடுபட்ட விவசாயிகள் மீதான வழக்குகள் ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர் அறிவித்தபோது, பேரவை உறுப்பினர்கள் மேஜையைத் தட்டி வரவேற்பு தெரிவித்தனர்.