தமிழ்நாடு சட்டப்பேரவையின் கேள்வி நேரத்தின் போது, ராணிப்பேட்டை தொகுதி தவெக எம்.எல்.ஏ தாஹிரா, “எனது தொகுதியில் உள்ள ஜே.கே. டயர் தொழிற்சாலையால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகிறது; எனவே அந்த ஆலையை மூட வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்தார். அதற்கு பதிலளித்த தொழில்துறை அமைச்சர் எஸ். கீர்த்தனா, மாநிலத்தின் தொழில் வளர்ச்சியும் வேலைவாய்ப்பும் முக்கியம் என்பதால் விதிமுறைகளுக்கு உட்பட்டு தொழிற்சாலை இயங்க அனுமதிக்கப்படும் எனத் தெரிவித்தார். இருப்பினும், ராணிப்பேட்டை தொகுதியில் ஜே.கே. டயர் தொழிற்சாலையே இல்லை என்பது பின்னரே தெரியவந்து பேரவையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இல்லாத ஒரு தொழிற்சாலையைப் பற்றி மக்கள் பிரதிநிதி கேள்வி எழுப்பியதும், அதற்கு அமைச்சரும் உடனடியாகப் பதிலளித்ததும் சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியது. இதனையடுத்த அரசியல் விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் வகையில் விளக்கமளித்த தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, “ராணிப்பேட்டையில் ஜே.கே. டயர் தொழிற்சாலை இல்லை என்பது உண்மைதான். இருப்பினும், உறுப்பினர் குறிப்பிட்டது வேறொரு டயர் தொழிற்சாலையாக இருக்கலாம் என்பதால் அது குறித்து விரிவாக ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டார்.
மேலும் தனது பதிவில், “தொழிற்சாலைகளும் வேலைவாய்ப்பும் மாநிலத்திற்கு எந்தளவு முக்கியமோ, அதே அளவிற்குச் சுற்றுச்சூழல் பாதுகாப்பும் முக்கியம் என்பதே அரசின் கொள்கை சார்ந்த நிலைப்பாடு” என அமைச்சர் கீர்த்தனா தெளிவுபடுத்தினார். அத்துடன், சமீபத்திய முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஜே.கே. டயர் நிறுவனத்துடன் ₹5,143 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதையும், அந்நிறுவனம் அரசு விதிக்கப்பட்ட சுற்றுச்சூழல் விதிகளுக்கு உட்பட்டுச் செயல்படும் என உறுதி அளித்துள்ளதையும் சுட்டிக்காட்டினார்.
ஆனால், இந்தச் சம்பவத்தைக் கையில் எடுத்துள்ள தமிழக பாஜகவினர் தவெக அரசைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். “சட்டமன்றத்தில் அடிப்படைத் தரவுகளையும் புள்ளிவிவரங்களையும் கூடச் சரியாகச் சரிபார்க்காமல் கேள்விகள் எழுப்புவதும், அதற்குப் பதிலளிப்பதும் சட்டப்பேரவையின் மாண்பைக் குறைப்பதாக உள்ளது” எனப் பாஜக நிர்வாகிகள் குற்றம்சாட்டியுள்ளனர். இல்லாத தொழிற்சாலை குறித்த இந்தச் சட்டமன்ற விவாதம் தற்போது தமிழக அரசியல் களத்தில் காரசாரமான விவாதப் பொருளாக மாறியுள்ளது.