Posted in

இன்னும் 2 மாதங்களில் காலியாகும் பெட்ரோல் – அமெரிக்காவின் கடும் தடைகளால் ஈரானில் வெடித்த எரிபொருள் தட்டுப்பாடு!

அமெரிக்கா விதித்துள்ள கடுமையான பொருளாதாரத் தடைகள் மற்றும் கடற்படை முற்றுகை காரணமாக, ஈரானின் எண்ணெய் சுத்திகரிப்பு உள்கட்டமைப்புகள் பாதிக்கப்பட்டு அந்நாட்டில் இன்னும் இரு மாதங்களுக்கு மட்டுமே போதுமான பெட்ரோல் இருப்பு (Gasoline Supply) உள்ளதாக மூத்த அரசு அதிகாரிகள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். உலகின் முன்னணி கச்சா எண்ணெய் உற்பத்தி நாடுகளில் ஒன்றாகத் திகழ்ந்த போதிலும், உள்நாட்டுச் சுத்திகரிப்பு திறன் குறைபாடு மற்றும் நிதி நெருக்கடி காரணமாக ஈரான் வரலாறு காணாத எரிபொருள் தட்டுப்பாட்டைச் சந்தித்து வருகிறது.

அமெரிக்க நிதியமைச்சகம் அண்மையில் அறிவித்த “ஆப்பரேஷன் எகனாமிக் அவுட்காஸ்ட்” (Operation Economic Outcast) திட்டத்தின் கீழ், ஈரானின் சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் மற்றும் கச்சா எண்ணெய் ஏற்றுமதி வழிகள் முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளன. இதனால் ஈரானின் கச்சா எண்ணெய் ஏற்றுமதி நாளொன்றிற்கு 2.6 லட்சம் பீப்பாய்களாகச் சரிந்துள்ள நிலையில், வெளிநாட்டுச் சலாவணி கையிருப்பு இல்லாததால் வெளிநாடுகளிலிருந்து சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலை இறக்குமதி செய்ய முடியாமல் ஈரான் அரசு திணறி வருகிறது.

தலைநகர் தெஹ்ரான் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் பொதுமக்கள் மணி கணக்கில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. தினசரி 1.5 கோடி லிட்டர் பெட்ரோல் பற்றாக்குறை நிலவுவதாகக் குறிப்பிட்டுள்ள ஈரான் பெட்ரோலிய அமைச்சகம், எரிபொருளைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு பொதுமக்களுக்குக் கோரிக்கை விடுத்துள்ளது. மேலும், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நட்பு நாடுகளும் நிதிப் பரிவர்த்தனைகளை நிறுத்தியுள்ளதால் ஈரானின் வணிகம் சுமார் 35 சதவீதம் வரை வீழ்ச்சியடைந்துள்ளது.

போரினால் நிலைகுலைந்துள்ள ஈரானில் உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்து வரும் சூழலில், பெட்ரோல் தட்டுப்பாடு அந்நாட்டு மக்களின் அன்றாட வாழ்க்கையை முற்றிலும் முடக்கியுள்ளது. அமெரிக்காவின் இந்த நசுக்கும் பொருளாதார நெருக்கடிகள் தொடர்ந்து நீடித்தால், வரும் நாட்களில் ஈரானில் பெரும் சமூக மற்றும் பொருளாதாரக் குழப்பங்கள் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகச் சர்வதேச அரசியல் வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.