Posted in

பிரிட்டனை அணுஆயுதத் தாக்குதலிலிருந்து காப்பாற்றினேன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடி பேச்சு!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரிட்டன் தொலைக்காட்சி ஊடகமான ‘ஜிபி நியூஸ்’ (GB News) நேர்காணலில் பங்கேற்றுப் பேசுகையில், ஈரான் மீது அமெரிக்கா நடத்திய ராணுவ நடவடிக்கையே பிரிட்டனை ஒரு மிகப்பெரிய அணுஆயுதத் தாக்குதலிலிருந்து காப்பாற்றியுள்ளதாகப் பேசி மீண்டும் உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். ஈரானிடம் அணுஆயுதம் இருந்திருந்தால், அவை அமெரிக்காவை விட ஐரோப்பிய நாடுகளையே முதலில் இலக்கு வைத்திருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப்படைகள் ஈரானுக்கு எதிராக முன்னெடுத்து வரும் போரின் பின்னணி குறித்துப் பேசிய டிரம்ப், “ஈரான் அணுஆயுத வல்லமை பெற்றிருந்தால் அதை ஐரோப்பாவிற்கு எதிராகவே பயன்படுத்தியிருக்கும். பிரிட்டனை அந்த ஆபத்தில் இருந்து நான் தான் காப்பாற்றியுள்ளேன்” எனக் கூறினார். மேலும், இந்த மோதலின் தொடக்கத்தில் பிரிட்டன் அரசு அமெரிக்கப் படைகளுக்குத் தளங்களை வழங்க மறுத்ததையும், போரில் போதிய ஒத்துழைப்பு அளிக்கத் தவறியதையும் அவர் பகிரங்கமாகச் சாடினார்.

தனது காரசாரமான உரையாடலில், பிரிட்டனின் வெளியுறவு, ஆற்றல் மற்றும் குடியேற்றக் கொள்கைகளையும் டிரம்ப் கடுமையாக விமர்சித்தார். லண்டன் மேயர் சாதிக் கானைக் (Sadiq Khan) “மோசமான மனிதர்” எனச் சாடியதுடன், லண்டன் மற்றும் பாரிஸின் சில பகுதிகளில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதால் காவல்துறையினரே செல்ல அஞ்சும் பகுதிகளாக மாறத் தொடங்கியுள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.

டிரம்பின் இந்தக் கூற்றுக்கு பிரிட்டன் தரப்பில் இருந்து ஆதரவும் விமர்சனங்களும் கிளம்பியுள்ளன. லண்டன் மேயர் தரப்பில் டிரம்பின் குற்றச்சாட்டுகள் மறுக்கப்பட்டுள்ள நிலையில், ஹோர்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) முடக்கத்தால் உலகளாவிய எரிபொருள் விலையேற்றம் மற்றும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள சூழலில், டிரம்பின் இந்த “பிரிட்டனைக் காப்பாற்றினேன்” என்ற அதிரடிப் பேச்சு சர்வதேச அரசியலில் மீண்டும் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.