Posted in

கே.என்.நேரு மற்றும் அவரது சகோதரர் வீட்டில் திடீர் சோதனை..வீட்டை சுற்றி அதிகாரிகள் குவிப்பு 

திமுக முன்னாள் அமைச்சரும், மூத்த தலைவருமான கே.என்.நேரு மற்றும் அவரது சகோதரர் என். ரவிச்சந்திரனுக்குச் சொந்தமான சென்னை மற்றும் திருச்சியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் (DVAC) சனிக்கிழமை அதிகாலை முதல் அதிரடிச் சோதனை நடத்தி வருகின்றனர். அரசு டெண்டர்களில் ‘கட்சி நிதி’ என்ற பெயரில் சட்டவிரோதமாகப் பண வசூல் செய்ததாக எழுந்த புகார்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சென்னையில் உள்ள அடையாறு, திருவான்மியூர் உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள வீடுகள் மற்றும் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக, கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரனுக்குச் சொந்தமான அலுவலகத்திலும், திருச்சியில் உள்ள தில்லை நகர் கே.என்.நேருவின் இல்லத்திலும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கொண்ட தனிப்படை தீவிர சோதனையை முடுக்கிவிட்டுள்ளது.

முந்தைய நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சராக கே.என்.நேரு பதவி வகித்த காலத்தில், பல்வேறு திட்ட ஒப்பந்தங்களுக்கு 7.5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை சட்டவிரோதமாகக் கமிஷன் தொகை பெறப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது தொடர்பாக அமலாக்கத் துறை பகிர்ந்த ஆதாரங்களின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்து, இந்த அதிரடி சோதனையை நடத்தி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

திருச்சியில் கே.என்.நேருவின் இல்லத்தைச் சுற்றிப் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுச் சோதனை நடைபெற்று வரும் செய்தி வெளியானதும், திமுக தொண்டர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்ட நிர்வாகிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குவிந்தனர். இச்சம்பவம் காரணமாக அப்பகுதியில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதுடன், தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பும் அதிர்வலைகளும் ஏற்பட்டுள்ளன.