உக்ரைன் தலைநகர் கீவின் மையப்பகுதியில் அமைந்துள்ள உக்ரைன் பாதுகாப்புச் சேவையின் (SBU) தலைமை அலுவலகக் கட்டிடத்தின் மீது ரஷ்யா அதிநவீன டிரோன் தாக்குதலை நடத்தியுள்ளது. வரலாற்று சிறப்புமிக்க புனித சோபியா கதீட்ரல் (St. Sophia Cathedral) தேவாலயத்திற்கு எதிரே உள்ள வோலோடிமிர்ஸ்கா வீதியில் (Volodymyrska Street) அமைந்துள்ள இந்த உயர்மட்ட உளவுத்துறை கட்டிடத்தை இலக்கு வைத்துப் பகல் நேரத்தில் நிகழ்த்தப்பட்ட இத்தாக்குதல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தாக்குதலின் தீவிரத்தன்மை குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, ரஷ்யாவின் டிரோன் நேரடியாக உக்ரைன் உளவுத்துறை தலைவர் ஒலெக்சாண்டர் போக்லாட்டின் (Oleksandr Poklad) அலுவலக அறையை இலக்கு வைத்தே தாக்குதல் நடத்தியதாக உறுதிப்படுத்தியுள்ளார். இந்த அதிரடித் தாக்குதலில் கட்டிடத்தின் மேல் பகுதி பலத்த சேதமடைந்ததுடன், அப்பகுதி முழுவதும் அடர்ந்த கருப்புகைப் மூட்டம் சூழ்ந்தது.
இத்தாக்குதலில் இதுவரை 5 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகக் கீவ் மேயர் விட்டாலி க்ளிட்ச்கோ தெரிவித்துள்ளார். உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக் குழுவினர் தீயைக் கட்டுப்படுத்தும் பணிகளிலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி அளிக்கும் பணிகளிலும் ஈடுபட்டனர். இத்தாக்குதல் குறித்து உளவுத்துறை தலைவர் போக்லாட்டிடம் தீவிர ஆலோசனை நடத்திய அதிபர் ஜெலென்ஸ்கி, இதற்குத் தகுந்த மற்றும் சமச்சீரான பதிலடியை ரஷ்யாவிற்கு உடனடியாக வழங்கிட உக்ரைன் ராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.
ஒடேசா மற்றும் த்னிப்ரோ ஆகிய நகரங்களில் ரஷ்யா நடத்திய அடுத்தடுத்த வான்வழித் தாக்குதல்களில் பொதுமக்கள் மற்றும் காவலர்கள் உயிரிழந்த சில மணி நேரங்களிலேயே, நாட்டின் மிக முக்கியமான பாதுகாப்பு தலைமையகத்தைக் குறிவைத்து ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது. உக்ரைன்-ரஷ்யா இடையேயான வான்வழி டிரோன் போரின் தீவிரத்தை இச்சம்பவம் மேலும் அதிகரித்துள்ளதுடன், இரு நாடுகளுக்கும் இடையே புதிய மோதல் அலையை உருவாக்கியுள்ளது.