அமெரிக்க நாட்டின் மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ் (Federal Reserve) உடனடியாகப் வட்டி விகிதங்களைக் குறைக்கத் தவறினால், அமெரிக்காவுடன் வர்த்தக உபரி (Trade Surplus) வைத்துள்ள நாடுகளுடனான அனைத்து வணிகப் பரிவர்த்தனைகளையும் முற்றிலும் நிறுத்துவேன் என அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடியாக எச்சரித்துள்ளார். நாட்டின் பொருளாதார மற்றும் வேலைவாய்ப்புத் தரவுகள் வெளியான சில மணி நேரங்களிலேயே, தனது ‘டிரூத் சோஷியல்’ (Truth Social) சமூக வலைதளப் பக்கத்தில் இந்த நிபந்தனையுடன்கூடிய கடுமையான அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார்.
ஆகஸ்ட் மாதத்தில் அமெரிக்காவில் எதிர்பார்ப்பதை விட அதிகமாக சுமார் 1,62,000 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவித்தன. இந்த வலுவான வேலைவாய்ப்பு வளர்ச்சி மற்றும் தொடரும் பணவீக்கம் காரணமாக, செப்டம்பர் மாதக் கூட்டத்தில் ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதங்களை உயர்த்தக்கூடும் என்ற எதிர்பார்ப்பு முதலீட்டாளர்களிடையே நிலவி வருகிறது. இந்தச் சூழலில், வட்டி விகிதத்தை உயர்த்தக் கூடாது மாறாகக் குறைக்க வேண்டும் என மத்திய வங்கித் தலைவர் கெவின் வார்ஷிற்கு (Kevin Warsh) டிரம்ப் பகிரங்க அழுத்தத்தைக் கொடுத்துள்ளார்.
தனது பதிவில் வட்டி விகிதத்தைக் குறைக்க வலியுறுத்திய டிரம்ப், “அமெரிக்கா தற்போது வலுவான பொருளாதாரப் பின்னணியைக் கொண்டுள்ளதால், உலகிலேயே மிகக் குறைந்த வட்டி விகிதம் கொண்ட நாடாக அமெரிக்கா விளங்க வேண்டும்” எனக் குறிப்பிட்டார். மேலும், “ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தைக் குறைக்கத் தவறினால், அமெரிக்காவுடன் அதிக வர்த்தக உபரி வைத்துள்ள நாடுகளுடனான வர்த்தகத்தை உடனடியாக நிறுத்துவேன்; சுங்க வரிகளை (Tariffs) விட இது சக்திவாய்ந்த நடவடிக்கை” என்றும் அவர் ஆவேசமாகப் பதிவிட்டுள்ளார்.
அமெரிக்க அதிபருக்கு நாட்டின் மத்திய வங்கியின் பணவியல் கொள்கையை நேரடியாகத் தீர்மானிக்கும் அதிகாரம் இல்லாத போதிலும், டிரம்ப் விடுத்துள்ள இந்த வர்த்தக ரத்து எச்சரிக்கை சர்வதேச நிதிச்சந்தையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. வர்த்தக உபரி வைத்துள்ள நாடுகளுடனான வர்த்தகத்தை முடக்குவது அமெரிக்கப் பொருளாதாரத்திற்கே பாதகமாக முடியக்கூடும் எனப் பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ள நிலையில், டிரம்பின் இந்த அதிரடி அறிவிப்பு உலகளாவிய வர்த்தக வட்டாரத்தில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.